தோக்கியோ: 85 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட நுழைவுச்சீட்டு ஒன்று தற்போது கண்காட்சியைக் காண உதவி உள்ளது.
மேற்கு ஜப்பான் நகரான ஒசாகாவில் எக்ஸ்போ 2025 என்னும் கண்காட்சி ஏப்ரலில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் அக்டோபர் மாதம்வரை நீடிக்கும் அந்தக் கண்காட்சியைக் காண வருவோர் 1940ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நுழைவுச் சீட்டுகளைக் கொண்டு வரலாம் என்று கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து இருந்தனர்.
194ஆம் ஆண்டு ‘கிராண்ட் இண்டர்நேஷனல் எக்ஸ்பொசிஷன் ஆஃப் ஜப்பான்’ என்னும் கண்காட்சியை தலைநகர் தோக்கியோவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான நுழைவுச்சீட்டு 1938ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால், இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சிக்கியதால் அந்தக் கண்காட்சி காலவரையறை இன்றி ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் அந்தக் கண்காட்சி நடைபெறவே இல்லை.
எனவே, தற்போது நடைபெறும் எக்ஸ்போ 2025 கண்காட்சியில் அந்த நுழைவுச்சீட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த திங்கட்கிழமை (மே 5) 85 ஆண்டு பழைமை வாய்ந்த சீட்டுடன் வந்த ஆடவர் ஒருவருக்கு இரண்டு புதிய நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாகக் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டு உள்ளனர்.
அந்த 25 வயது ஆடவரின் பெயர் ஃபூமியா டேக்நாவா. தோக்கியோவைச் சேர்ந்த அவர் கண்காட்சி தொடர்பான நினைவுப்பொருள்களைச் சேகரிப்பவர். இவ்வாண்டு மார்ச் மாதம் இணையம் வாயிலாக 1940ஆம் ஆண்டின் நுழைவுச்சீட்டை வாங்கியதாக ‘மைனிச்சி ஷிம்புன்’ என்னும் ஜப்பானிய நாளிதழ் ஒன்று தெரிவித்து உள்ளது.