சோல்: பொய்யான புகார்களுக்காக ஈராண்டுக் காலத்திற்குள் கிட்டத்தட்ட 60,000 முறை காவல்துறையை அழைத்த ஆடவரைத் தென்கொரியக் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) கைதுசெய்தனர்.
அந்தச் சந்தேகப் பேர்வழி விடுத்த 58,307 அழைப்புகளில் 51 அழைப்புகள், காவல்துறையின் உடனடித் தலையீடு தேவைப்பட்ட கடுமையான குற்ற அச்சுறுத்தல் தொடர்பானவை என்று தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, 2024 மே மாதத்தில் நான்கு நாள்களில் மட்டும் அவர் 1,882 முறை காவல்துறையைத் தொடர்புகொண்டார்.
தமக்கு அபராதம் விதிக்கப்பட்டதால் 50களில் இருக்கும் அந்த ஆடவர் அதிருப்தி அடைந்து, அத்தனை முறை காவல்துறையை அழைத்ததாகச் சொல்லப்படுகிறது. அந்தத் தண்டனையும் காவல்துறையில் பொய்யான புகார்களை அளித்ததற்காக விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தம் சகோதரரைக் கொல்லப் போவதாகச் சொன்னது, அவரை அடைத்து வைத்துள்ளதாகக் கூறியது, தன் விருப்பத்திற்கு மாறாகத் தான் பத்து ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறியது ஆகியவை அவரது பொய்ப் புகார்களில் சில.
பொய்ப் புகார்களுக்காக அபராதம் செலுத்தச் சொல்லி கடந்த 2023ஆம் ஆண்டிலிருந்து ஏழுமுறை அவருக்கு உத்தரவிடப்பட்டது. அழைப்பாணைகளுக்கு இணங்க மறுத்ததால் அவரைக் கைதுசெய்ய உத்தரவிடும்படி காவல்துறை கோரிக்கை விடுத்தது.
அரசாங்க அதிகாரிகளைக் கடமையாற்றவிடாமல் தடுத்ததற்காக அந்த ஆடவர் விசாரிக்கப்பட்டு வருகிறார். குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், அவருக்கு ஐந்தாண்டுகள் சிறை அல்லது 10 மில்லியன் வொன் (S$9,200) அபராதம் விதிக்கப்படலாம்.