கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் கொலை; ஆடவர் கைது

2 mins read
0fccd5e0-572f-498d-b63b-2748199797e0
கொலைச் சம்பவம், கனடாவில் உள்ள இரண்டு சமூகங்களுக்கு இடையிலான பதற்றநிலையை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. - படம்: இந்திய ஊடகம்

டொரோன்டோ: காலிஸ்தானிய ஆதரவாளரான ரபிந்தர் சிங் மல்ஹி என்பவர் கொல்லப்பட்டதன் தொடர்பில், இந்தோ-கனடிய ஆடவரான ரஜிந்தர் குமாரைக் கைது செய்துள்ளதாக கனடியக் காவல்துறை கூறியுள்ளது.

அந்தக் கொலைச் சம்பவம், கனடாவில் உள்ள இரண்டு சமூகங்களுக்கு இடையிலான பதற்றநிலையை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விசாரணைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் தொடர்பில், குமாரின் மனைவி ஷீத்தல் வர்மாவையும் காவல்துறை கைதுசெய்துள்ளது.

கொலைக்கான காரணத்தை உள்ளூர் காவல்துறையினர் இன்னும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், குமாரும் மல்ஹியும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்று அவர்கள் கூறினர்.

இந்தச் சம்பவத்தில் ‘சீக்கியர்களுக்கு நீதி’ எனும் குழு சம்பந்தப்பட்டிருப்பது கேள்விகளை எழுப்பியுள்ளது. அக்குழு, கொலைச் சம்பவத்தில் இந்துத்துவத்தை ஆதரிப்போர் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறி வருகிறது.

கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கொள்கையின் ஒரு பகுதியாக காலிஸ்தானியர்களைச் சமாதானப்படுத்த, குமார் கைது செய்யப்பட்டதாக சிலர் கூறி வருகின்றனர்.

இந்து சபா கோயில் பூசாரி ரஜிந்தர் பர்சாத் நவம்பர் 3ஆம் தேதி வன்முறைக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, வாட்ஸ்அப்பில் குமாருக்கும் மல்ஹிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக ‘சீக்கியர்களுக்கு நீதி’ குழுத் தலைவரும் காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதியுமான குர்பட்வந்த் சிங் பன்னுன் கூறினார்.

இதன் காரணமாக குமார் மல்ஹியைத் தனது வீட்டிற்கு அழைத்து, அவரைக் கொலை செய்ததாக பன்னுன் கூறினார். கனடியக் காவல்துறை அதிகாரிகள் பர்சாத்தையும் கைது செய்திருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

பிரேம்டனைச் சேர்ந்த மல்ஹி, 52, நவம்பர் 9ஆம் தேதி, ‘டியர் ரிட்ஜ் டிரெய்ல்’ பகுதியில் உள்ள வீட்டில் காயமடைந்த நிலையில் காணப்பட்டதாக உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.

மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், பின்னர் உயிரிழந்தார்.

குறிப்புச் சொற்கள்