கோத்தா கினபாலு: போதையிலிருந்த ஆடவர் ஒருவர் தமது காரின் கட்டுப்பாட்டை இழந்ததால், சாலையிலிருந்து வழுக்கிச் சென்ற அந்த கார் ஐந்து வாகனங்கள்மீது மோதி, பின்னர் வங்கி ஒன்றின் கண்ணாடிக் கதவுமீது மோதி அதனை நொறுக்கியது.
இச்சம்பவம் மலேசியாவின் தாவாவில் உள்ள ஜாலான் மஹ்காமா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) காலை நேர்ந்தது.
அதிகாலை 5.15 மணியளவில், அந்த 25 வயது ஆடவர் நகர மையத்திலிருந்து தஞ்சுங் பத்துவிலுள்ள தமது வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது இவ்விபத்து நேர்ந்ததாகக் காவல்துறைத் துணை ஆணையர் ஜாஸ்மின் ஹுசைன் கூறினார்.
விசாரணையில் அந்த இளையர் போதையில் இருந்ததும் அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாததும் தெரியவந்தது.
“இச்சம்பவத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை,” என்றும் திரு ஹுசைன் சொன்னார்.
காவல்துறை அந்த இளையரைக் கைதுசெய்து, அவர்மீது வழக்கு பதிந்துள்ளது.
விபத்து தொடர்பான எட்டு நொடிக் காணொளி இணையத்தில் பரவி வருகிறது.