பேங்காக்: கோபத்துடன் வேண்டுமென்றே மோட்டார்சைக்கிள் ஓட்டிச் சென்ற ஒரு விநியோக ஊழியர் மீது 31 வயது செரீ ஸ்ரெத்தீனாம்வோங் மோதிக் கொன்றதன் தொடர்பில் ஜனவரி 22ஆம் தேதி தென் பேங்காக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
இவ்வாறு தாக்கியதன் நோக்கம் என்ன, இறந்த 49 வயது ஆடவரின் குடும்பத்திடம் மன்னிப்பு கோர விரும்புகிறாரா எனச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு செரீ பதிலேதும் கூறவில்லை.
தலைகுனிந்தபடி இருந்த அவரின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது.
துணிக்கடை உரிமையாளர் மகனான செரீ, சுகும்விட் ரோட்டில் ரித்திசக் பிராகுப்டானோன்ட் என்பவரின் மோட்டார்சைக்கிள் மீது ஜனவரி 21ஆம் தேதி வேண்டுமென்றே மோதினார்.
கோபத்தால் ஏற்பட்ட சச்சரவு இது என்று காவல் அதிகாரிகளும் சம்பவத்தை நேரில் கண்டோரும் கூறியுள்ளனர். ரித்திசக்கின் மோட்டார்சைக்கிள் மீது செரீ மோதியதை அடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் செரீயின் காரை நிறுத்துவதற்கு ரித்திசக் தமது வண்டியை அதன் முன்னால் நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
செரீ வாகனத்தை விட்டு வெளியேறி தமது வண்டிக்கு ஏற்பட்ட சேதம் குறித்து பேச வேண்டும் என்று ரித்திசக் கேட்டிருக்கிறார்.
செரீ அங்கிருந்து வாகனத்தை ஓட்டிச் செல்ல முயன்றபோது, ஓட்டுநர் பக்கச் சன்னலை ரித்திசக் தம் கையால் இரண்டு, மூன்று முறை தட்டியிருக்கிறார். உடனே, செரீ தன் காரை விட்டு வெளியேறி ரித்திசக்கைத் தாக்கத் தொடங்கிவிட்டார்.
ரித்திசக் அங்கிருந்து தப்ப முயன்றபோது, செரீ காரில் துரத்தி ரித்திசக்கின் வண்டியை மோதினார்.
தொடர்புடைய செய்திகள்
வண்டியிலிருந்து தூக்கியெறிப்பட்டார் ரித்திசக். கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்த உலோகக் கம்பம் ஒன்றின்மீது அவரின் உடல் பயங்கரமாக மோதியது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவ இடத்திலேயே ரித்திசக் மாண்டுவிட்டார் என்றும் கூறப்பட்டது.
காவல் அதிகாரிகளும் மீட்புப் பணியினரும் சம்பவ இடத்தை அடைந்தபோது ரித்திசக் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
ரித்திசக் 8 வயது முதல் 18 வயது வரையிலான நான்கு பிள்ளைகளுக்குத் தந்தை. அத்துடன், அவரின் வருமானத்தை மட்டுமே நம்பியுள்ளது அவரின் குடும்பம்.
தற்போது 600,000 பாட் (S$23,939.90) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள செரீ, எந்நேரமும் மின்னியல் காப்பு ஒன்றை அணிந்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

