ஈப்போ: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தின் உலு திராம் காவல் நிலையத்தில் இவ்வாண்டு மே மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் இரு காவலர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் கொல்லப்பட்ட காவலர் குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாகச் சந்தேகிக்கப்படும் 25 வயது உள்ளூர் ஆடவர் ஒருவரை மலேசியக் காவல்துறை செப்டம்பர் 5ஆம் தேதி கைது செய்தது.
உலு திராம் சம்பவத்தில் கொல்லப்பட்ட காவலர்களில் ஒருவரான அஹ்மத் அஸ்ஸா ஃபஹ்மி அஸ்ஹரின் குடும்பத்தினர் ஆகஸ்ட் 29ஆம் தேதி அளித்த புகாரைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தாப்பா மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமது நைம் அஸ்னாவி ‘பெர்னாமா’விடம் கூறினார். மேலும், தொழிற்சாலையில் பணிபுரிந்த சந்தேக நபரின் கைப்பேசியைக் காவல்துறை பறிமுதல் செய்தது.
சந்தேக நபர் விசாரணைக்காகச் செப்டம்பர் 9ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்படுவார் என்று திரு முகமது நைம் தெரிவித்தார்.