சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து; ஆடவர் கைது

1 mins read
c8a6738b-906b-4950-bdc7-4cd091d7dfbe
சிட்னியில் உள்ள தேவாலயம் ஒன்றில் தாக்குதல்காரர், ஆயர் மார் மரி இமானுவலை அணுகுவதைக் காணொளிப் படம் காட்டுகிறது. - படம்: ஃபேஸ்புக்

சிட்னி: மேற்கு சிட்னியில் உள்ள தேவாலயம் ஒன்றில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அதிகாரிகள் ஆடவர் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர்.

அந்தத் தாக்குதலில் சிலர் காயமடைந்தனர்.

அந்த ஆடவர் விசாரணையில் உதவிவருவதாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை, அறிக்கை ஒன்றில் கூறியது.

வேக்லியில் உள்ள ‘தி குட் ஷெப்பர்ட்’ தேவாலயத்தில், ஓர் ஆயரும் அங்கு வழிபாட்டில் ஈடுபட்டிருந்த சிலரும் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டவர்களில் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டது.

நேரடியாக ஒளிபரப்பப்பட்ட ஆயர் மார் மரி இமானுவலின் வழிபாட்டுச் சேவையின்போது அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

வழிபாட்டு இடத்தில் பேசிக்கொண்டிருந்த ஆயரை ஆடவர் ஒருவர் அணுகியதையும், அவரைப் பல முறை கத்தியால் குத்தியதையும் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிடப்பட்ட காணொளியில் காணமுடிந்தது.

அதன் பிறகு, சந்தேக நபரைப் பிடிக்க அங்கு வழிபாடு செய்துகொண்டிருந்தவர்களும் அவரை நோக்கி ஓடினர். சந்தேக நபரும் ஆயருடன் தரையில் விழுந்தார்.

காயமடைந்தோரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று காவல்துறை கூறியது.

ஏப்ரல் 13ஆம் தேதி சிட்னியின் போண்டை கடற்கரைக்கு அருகில் உள்ள கடைத்தொகுதியில் நடந்த கத்திக்குத்துத் தாக்குதலைத் தொடர்ந்து, அண்மைய தாக்குதல் நடந்துள்ளது.

ஏப்ரல் 13ஆம் தேதி தாக்குதலில் தாக்குதல்காரர் உட்பட ஏழு பேர் மாண்டனர்.

குறிப்புச் சொற்கள்