சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் ஆடவர் ஒருவரைப் பிடிக்க முயன்றபோது காவல்துறை அதிகாரிக்குச் சொந்தமான துப்பாக்கி சுடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனால் அங்கு பதற்றநிலை நிலவியது.
இந்தச் சம்பவம் புதன்கிழமை (ஆகஸ்ட் 13) காலை சிட்னி விமான நிலையத்தின் உள்நாட்டு விமானச் சேவை முனையத்தில் நிகழ்ந்தது.
ஆஸ்திரேலியாவில் உள்ள விமான நிலையங்களில் சிட்னி விமான நிலையம் ஆக அதிகமான பயணிகள், விமானப் போக்குவரத்தைக் கையாள்கிறது.
ஆடவரை இருவர் மடக்கிப் பிடிக்க, அதிகாரி ஒருவர் தமது துப்பாக்கியைச் சோதித்துப் பார்ப்பதைக் காட்டும் காணொளி ஆஸ்திரேலிய ஊடகத்தால் வெளியிடப்பட்டது.
அதிகாரியிடமிருந்து துப்பாக்கியைப் பறிக்க அந்த ஆடவர் முயன்றபோது துப்பாக்கி சுடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பலத்த சத்தம் கேட்டதை அடுத்து, உணவருந்தும் பகுதியிலிருந்து வெளியேறவோ அல்லது அதற்குள் செல்லவோ யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர்.
“சம்பவம் தொடர்பான விசாரணை தொடங்கியுள்ளது. குற்றம் நிகழ்ந்த இடம் அடையாளம் காணப்பட்டுவிட்டது,” என்று காவல்துறை அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
“சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பொதுமக்களுக்கு ஆபத்து ஏதும் இல்லை,” என்று காவல்துறை கூறியது.
சிட்னி விமான நிலையம் வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

