சோல்: தென்கொரியாவின் இஞ்சியோன் நகரில் இம்மாதம் 13ஆம் தேதி கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திய 59 வயதுச் சந்தேக நபர், பலவீனமானவர்களைக் குறிவைத்ததாகவும் பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவ்வாறு செய்ததாகவும் காவல்துறையிடம் கூறியுள்ளார்.
தமக்கிருந்த சேற்றுப்புண் குணமடையாமல் இருந்ததை முன்னிட்டு தமக்குச் சிகிச்சை அளித்த மருத்துவமனைமீது சினமுற்றிருந்ததாக ஆடவர் அதிகாரிகளிடம் சொன்னதாக நம்டொங் காவல் நிலையம் குறிப்பிட்டது.
அதன் தொடர்பில் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து மருத்துவமனைக்கு அருகே ஆர்ப்பாட்டங்களை நடத்திய ஆடவர், அவ்வப்போது ஆயுதம் ஏந்தியும் ஆர்ப்பாட்டம் செய்தார்.
பொது இடத்தில் ஆயுதம் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் காவல்துறை அதிகாரிகள் செப்டம்பரில் அவரிடம் விசாரணை நடத்தினர். அதிகாரிகளிடம் தகவல் அளித்ததற்காக மருத்துவமனைமீது அவர் மேலும் கோபமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
“பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கவும் சமூகத்துக்கு என் ஆதங்கத்தை வெளிப்படுத்தவும் அந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டேன்,” என்று ஆடவர் அதிகாரிகளிடம் கூறினார்.
மேலும், தம்மைவிடப் பலவீனமாக உள்ளவர்களைக் குறிவைத்ததாகக் கூறிய ஆடவர் யாரையும் கொலை செய்ய எண்ணம் கொண்டிருக்கவில்லை என்றும் சொன்னார்.
அந்த ஆடவர், இதற்குமுன் முன்னாள் மனைவியைக் கொலை செய்ய முயன்றதற்காக நான்காண்டுச் சிறைத்தண்டையை நிறைவேற்றி 2019ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டவர்.
அக்டோபர் 13ஆம் தேதி கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தியபோது அவரது கணுக்காலில் கண்காணிப்புச் சாதனம் ஒன்றை அணிந்திருந்தார்.
அவர் அதிக அளவிலான மருந்து மாத்திரைகளை வைத்திருந்ததாகக் குறிப்பிட்ட அதிகாரிகள், பெரும்பாலும் அவை அவருக்கு வழங்கப்பட்டவை என்று குறிப்பிட்டனர்.
சந்தேக நபர் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் பத்துப் பேர் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர்களில் எட்டுப் பேருக்குச் சிகிச்சை தேவைப்பட்டது.
