மலாக்கா: மலேசியாவில் தன் காதலியின் மூன்று வயது மகனைக் கொன்றதாக முஹம்மது ஃபிர்மான் ஹக்கிமி அப்துல் ரஹ்மான் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
25 வயதான அந்த ஆடவர் ஆயர் கெரோ குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்தக் குற்றச்சம்பவம் தாமான் பயா இமாசில் உள்ள ஒரு வீட்டில் ஜூலை மாதம் 6ஆம் தேதி காலை 5.30 மணிக்கும் 6.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நடந்தது.
முஹம்மது தயான் மிகைல் முகமது ரசிஹான் என்ற சிறுவனை அந்த ஆடவர் எப்படி கொன்றார் என்பது தெரியவில்லை. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
அந்த ஆடவருடன் இணைந்து சிறுவனை அடித்து துன்புறுத்தி, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் காயப்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அந்தச் சிறுவனின் தாய் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த மாதுக்கு அதிகபட்சமாக 20,000 ரிங்கிட் அபராதம்,10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.