சிட்னி துப்பாக்கிச் சூட்டில் மாண்டவரிடம் திருடிய ஆடவர்மீது குற்றச்சாட்டு

சிட்னி துப்பாக்கிச் சூட்டில் மாண்டவரிடம் திருடிய ஆடவர்மீது குற்றச்சாட்டு

1 mins read
மாண்ட புகைப்படக்காரரின் கருவிகளைத் திருடியவரும் ஒரு புகைப்படக்காரர்
c4b02283-d556-40e0-9330-bbb489cd5422
புகைப்படக் கருவிகளை மாண்டவரிடம் இருந்து திருடிய குற்றச்சாட்டை அந்த 35 வயது ஆடவர் எதிர்நோக்குகிறார். - படம்: நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை ஃபேஸ்புக்

சிட்னி: 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் சிட்னி மாநில போண்டாய் கடற்கரையில் பொதுமக்கள் கலந்துகொண்ட ‘ஹனுக்கா’ திருவிழாக் கொண்டாட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் இரு பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.

அவ்வாறு மாண்டோரில் அன்றையதினம் நடந்த நிகழ்வுகளைப் புகைப்படமெடுக்கச் சென்ற பீட்டர் மீகர் என்ற பகுதிநேர சுய தொழில் செய்பவரும் ஒருவர்.

அவர் மரணமடைந்த பிறகு, அவரது உடலுக்கு அருகே கிடந்த புகைப்படக் கருவிகளை ஒரு 35 வயது ஆடவர் திருடிச் சென்று பிறகு அவற்றை விற்றுப் பணம் பெற்றார் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநிலக் காவல்துறை தெரிவித்தது. அந்த ஆடவர்மீது நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (மே 21) குற்றஞ்சாட்டப்பட்டது.

கருவிகளைத் திருடியவரும் ஒரு புகைப்படக்காரர் என்று விசாரணையில் தெரியவந்தது.

போதைப்பொருள்

போதைப்பொருள் வைத்திருந்த மற்றொரு குற்றமும் ஆடவர்மீது சுமத்தப்பட்டுள்ளது. அவர் விசாரணைக்காக ஜூன் மாதம் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாக உள்ளார்.

அந்தக் கடற்கரைத் துப்பாக்கிச்சூட்டை நடத்திய சஜித் அக்ரம் என்ற 50 வயது ஆடவர் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மகனான நவீட் என்பவர்மீது 15 பயங்கரவாதக் கொலைகள் உட்பட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இவ்வாண்டு மே மாதம் தொடங்கிய அந்தச் சம்பவம் குறித்த விசாரணைகளில் பொதுமக்கள் சாட்சியமளித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்