அமெரிக்கத் துணையதிபரைக் கொல்ல மிரட்டியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

அமெரிக்கத் துணையதிபரைக் கொல்ல மிரட்டியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
afd538b4-a105-4219-bb7c-7e964222d8d5
மிரட்டியவருக்கு  ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.  - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்கத் துணையதிபர் ஜே.டி. வேன்சைக் கொல்ல மிரட்டியதன்பேரில், அந்நாட்டின் மத்திய நீதிமன்றம் 33 வயது ஒருவர் மீது குற்றம் சாட்டியுள்ளது.

ஒஹாயோவைச் சேர்ந்த ஷேனன் மத்ரே (Shannon Matre), திரு. வேன்ஸின் உயிரை மாய்க்கவும் அவருக்கு உடல் ரீதியான தீங்கை விளைவிக்கவும் மிரட்டல் விடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்படுவதாக அமெரிக்காவின் சட்டத்துறை தெரிவித்தது.

“(துணையதிபர்) எங்கு இருக்கப்போகிறார் என்பதைக் கண்டுபிடித்து, எனது எம்14 தானியங்கித் துப்பாக்கியைப் பயன்படுத்தி அவரைக் கொல்லப்போகிறேன்,” என்று அந்த ஆடவர் கூறியதாகக் குற்றச்சாட்டு அறிக்கை குறிப்பிடுகிறது.

பிப்ரவரி 6ல் மத்ரேயை அமெரிக்க ரகசியப் பிரிவினர் (Secret Service) கைது செய்தனர்.

கடந்த பத்தாண்டுகளில் சமூகப் பிளவுகள் ஆழமாகப் படிந்துள்ள அமெரிக்காவில், அரசியல் வன்முறை குறித்து நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த வாரத்தின் தொடக்கத்தில், அமெரிக்க நாடாளுமன்றச் சிறுபான்மைத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரீசைக் கொல்ல மிரட்டிய ஒருவர், தொல்லை விளைவித்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

மிரட்டலை விசாரித்த அதிகாரிகள், மத்ரே சிறார் பாலியல் வன்முறைப் படங்களை (CSAM) வைத்திருந்ததையும் கண்டுபிடித்தனர்.

ஒஹாயோ மாநிலத்தின் வடக்கு மாவட்டத்திற்கான நீதிபதி முன்னிலையில் மத்ரே தொடக்கத்தில் முன்னிலையானார். அவர் அடுத்ததாக பிப்ரவரி 11ல் விசாரிக்கப்படுவார் என்று சட்டத்துறை கூறியது.

குற்றவாளி என உறுதி செய்யப்பட்டால், மத்ரேவுக்கு அதிகபட்சம் ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அத்துடன் அவருக்கு S$320.000 (US$250,000) வெள்ளி அபராதம் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்