தென்கொரியாவில் ‘ஏஐ’ கண்ணாடியைப் பயன்படுத்தி தேசியத் தேர்வில் முறைகேடு செய்த ஆடவர்

தென்கொரியாவில் ‘ஏஐ’ கண்ணாடியைப் பயன்படுத்தி தேசியத் தேர்வில் முறைகேடு செய்த ஆடவர்

1 mins read
d433621e-0ca8-4630-be57-922a702edfc4
தேர்வு அறைகளில் தடைசெய்யப்பட்ட பொருள்களின் பட்டியலில் ‘ஏஐ’ தொழில்நுட்பக் கண்ணாடிகளைச் சேர்ப்பது குறித்து தென்கொரிய அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். - படம்: இபிஏ

சோல்: தென்கொரியாவில் தேசியத் தகுதிநிலைத் தேர்வில் முறைகேடு செய்ய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பக் கண்ணாடியைப் பயன்படுத்தியதற்காக 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அத்தகைய தொழில்நுட்பக் கருவி சம்பந்தப்பட்ட நாட்டின் முதல் சட்ட நடவடிக்கை அது.

தேசியத் தொழில்நுட்பத் தகுதிநிலைச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின்கீழ், குவாங்ஜு மாவட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் ஜூன் மாதம் அந்த ஆடவர்மீது குற்றஞ்சாட்டியதாக திங்கட்கிழமை (ஜூலை 13) உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

கடந்த மே மாதம் குவாங்ஜுவில் நடைபெற்ற தீப் பாதுகாப்பு வசதிகள் பொறியாளர் சான்றிதழ்த் தேர்வை எழுதியபோது அவர் பிடிபட்டார்.

தேர்வு மேற்பார்வையாளர் ஒருவர், அவரது கண்ணாடியின் வில்லையில் ஒளி பிரதிபலிப்பதைக் கவனித்துச் சந்தேகமடைந்ததை அடுத்து, அந்த முறைகேடு வெளிச்சத்திற்கு வந்தது.

விசாரணையின்போது, அந்த ஆடவர் தான் முறைகேடு செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், அந்தக் கண்ணாடியுடன் இணைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுச் செயலியை தானே உருவாக்கியதாகவும் அதன் மூலம் சரியான விடைகள் சரியாகக் காட்டப்படுகின்றனவா என்பதைச் சோதித்துப் பார்க்கவே அவ்வாறு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், முக்கியத் தேசியத் தகுதிநிலைத் தேர்வுகளை நடத்தும் அமைப்புகளின் அதிகாரிகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்துக் கலந்துபேச ஜூலை 10ஆம் தேதி அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.

தேர்வு அறைகளில் தடைசெய்யப்பட்ட பொருள்களின் பட்டியலில் ‘ஏஐ’ தொழில்நுட்பக் கண்ணாடிகளைச் சேர்ப்பது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்