ஒரே ஓர் ஓய்வு நாள், 104 நாள்கள் தொடர்ந்து வேலை; ஊழியர் மரணம்

ஒரே ஓர் ஓய்வு நாள், 104 நாள்கள் தொடர்ந்து வேலை; ஊழியர் மரணம்

2 mins read
911704b6-d0ee-4438-8d40-1c0134d18ec0
ஊழியருக்குத் தரப்பட்ட வேலைப்பளு சமாளிக்கக்கூடியதாக இருந்ததென நிறுவனம் கூறியது. - படம்: பிக்சாபே

அண்மையில் ஊழியர் ஒருவரது மரணம் நாட்டின் தொழிலாளர் சட்டமீறலை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

ஒரே ஓர் ஓய்வு நாளைத் தவிர தொடர்ச்சியாக 104 நாள்களுக்கு வேலை செய்த 30 வயது ஆடவர், நோய்வாய்ப்பட்டு மருத்துவ உதவி நாடினார்.

ஆனால், அவசர சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்ட பிறகும் உறுப்புகள் செயலிழந்த நிலையில் அவர் மரணமடைந்தார்.

சீனாவின் ஸெஜியாங் மாகாணத்தில் நீதிமன்றம் ஒன்று இதுகுறித்து விசாரித்ததில் ஊழியரின் மரணத்துக்கு அவரின் முதலாளி 20% பொறுப்பேற்க வேண்டும் என்றும் நிறுவனம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்ததால் ஆடவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு இறந்ததாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்தது.

ஆடவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சாய வேலைக்காக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார்.

ஒப்பந்தம் இவ்வாண்டு ஜனவரி வரை நீடித்தது. பின்னர், பிப்ரவரி முதல் மே வரை ஆடவர் தினமும் வேலை செய்தார். அவருக்கு ஏப்ரல் 6ஆம் தேதி மட்டும் ஓய்வு நாளாகத் தரப்பட்டது.

இந்நிலையில், மே 25ஆம் தேதி ஆடவர் நோய்வாய்ப்பட்டார். அவருடைய நிலை மிக வேகமாக மோசமடைந்தது.

பின், மே 28ஆம் தேதி நுரையீரல் தொற்று, சுவாச செயலிழப்பால் ஆடவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஜூன் 1ஆம் தேதி உயிரிழந்தார்.

அலட்சியமாக நடந்துகொண்டதாகக் கூறி, ஆடவரின் குடும்பத்தார் நிறுவனத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொண்டனர். இருப்பினும், ஆடவருக்குத் தரப்பட்ட வேலைப்பளு சமாளிக்கக்கூடியதே என்று நிறுவனம் மன்றாடியது.

ஆனால், சீனாவின் தொழிலாளர் சட்டத்தின்படி ஆடவர் தொடர்ச்சியாக 104 நாள்களுக்கு வேலை பார்த்தது சட்டமீறல் என்று நீதிமன்றம் கண்டறிந்தது.

ஆடவரின் குடும்பத்தாருக்கு உணர்வுரீதியாக ஏற்பட்ட பாதிப்புக்காக இழப்பீட்டுத் தொகையாக 56,000 அமெரிக்க டாலர் (S$72,500) வழங்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால், நீதிமன்றத் தீர்ப்பால் சீன சமூக ஊடகவாசிகள் கொந்தளித்துப் போயுள்ளனர். நிறுவனத்தை அவர்கள் சாடியுள்ளதுடன் இழப்பீட்டுத் தொகை குறைவாக உள்ளது என்றும் விமர்சித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்