தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விபத்தில் சிக்கியவருக்கு உதவச் சென்றவர் கார் மோதி உயிரிழப்பு

1 mins read
2f44a624-4da9-4304-a1ed-01d3c163fd82
உதவச் சென்ற டான் விங் ஃபூ, 47, சம்பவ நாளன்று இரவு 7 மணிக்கு பென்டோங் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: பென்டோங் காவல்துறை/ஃபேஸ்புக்

பென்டோங்: கோலாலம்பூர் நோக்கிச் செல்லும் கோலாலம்பூர் - கராக் நெடுஞ்சாலையில், விபத்தில் சிக்கியவருக்கு உதவச் சென்ற ஆடவர் மீது மற்றொரு கார் மோதியதில் அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பிப்ரவரி 15ஆம் தேதி நடந்தது.

மாண்ட ஆடவரின் பெயர் டான் விங் ஃபூ என்றும் அவருக்கு வயது 47 என்றும் பென்டோங் காவல்துறைத் தலைவர் ஸைகம் முகமது கஹார், மலாய்மொழி நாளிதழான சினார் ஹரியானிடம் தெரிவித்தார்.

விபத்தை அடுத்து சிகிச்சைக்காக பென்டோங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட திரு டான் இரவு 7 மணிக்கு உயிரிழந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பவம் குறித்து மாலை 5.30 மணிக்குக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததாக திரு ஸைகம் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில் குவாந்தானிலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்ற கார் ஒன்று சறுக்கிச் சென்று சாக்கடையில் வீழ்ந்தது தெரியவந்தது என்றார் அவர்.

இதனால் அந்த இடத்தைக் கடந்து சென்ற ஓட்டுநர்கள் சிலர் வாகனங்களை நிறுத்திவிட்டு சறுக்கிய காரின் ஓட்டுநருக்கு உதவச் சென்றதாகவும் அவர்கள் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த முயன்றபோது மற்றொரு கார் கட்டுப்பாட்டை இழந்து இருவர் மீது மோதியதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து நால்வர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி மாண்டார் என்று திரு ஸைகம் கூறினார்.

இச்சம்பவத்தை நேரில் கண்டவர்கள் முன்வந்து விசாரணையில் உதவும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், விபத்தில் சிக்கியோருக்கு உதவுபவர்கள் எப்போதும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாகார்விபத்துஉதவிஉயிரிழப்பு