தன் சகோதரிதான் தன் மனைவி என்பதை அறிந்து ஆடவர் பேரதிர்ச்சி

தன் சகோதரிதான் தன் மனைவி என்பதை அறிந்து ஆடவர் பேரதிர்ச்சி

2 mins read
4a273702-a101-494e-b13f-96602b410deb
இப்போது இரு குழந்தைகளுக்கும் பெற்றோராகிவிட்டனர் அவ்விணையர். படம்: ஊடகம் -

தன்னை மணந்துகொண்டு, இரு குழந்தைகளுக்குத் தாயாகி, தன்னுடன் ஆறாண்டுகளாக வாழ்ந்து வருபவர் உண்மையில் தன் சகோதரி என்பது தெரியவந்ததால் ஆடவர் ஒருவர் மனமுடைந்து போயுள்ளார்.

இரண்டாவது குழந்தை பிறந்தபின் அப்பெண்ணின் உடல்நிலை குன்றிவிட்டது. அவருக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டிய நிலையில், கணவரே சிறுநீரக தானமளிக்க முன்வந்தார்.

அதற்கு முந்திய மருத்துவப் பரிசோதனைகளின்போது, இருவரின் மரபணுக்களும் பெரிதும் ஒத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையறிந்து தான் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்ததாகக் குறிப்பிட்டார் அந்த ஆடவர்.

பெற்றோரின் மரபணுக்களும் பிள்ளையின் மரபணுவும் கிட்டத்தட்ட 50% பொருந்தும் என்றும் உடன்பிறந்தோரைப் பொறுத்தமட்டில், அப்பொருத்தம் 0%-100% இருக்கும் என்றும் மருத்துவர் தன்னிடம் கூறியதாக அவர் சொன்னார்.

ஆனால், கணவனுக்கும் மனைவிக்கும் இப்படி மரபணுப் பொருத்தம் அதிகமாக இருப்பது அரிதினும் அரிது என்பதால், இதற்கு என்ன அர்த்தம் என்று மருத்துவரிடம் தான் கேட்டதாக அவர் கூறினார்.

எட்டாண்டுகளுக்குமுன் இன்னோர் ஊரில் வேலை செய்தபோது அங்கு தன் மனைவியை அவர் முதன்முதலாகச் சந்தித்தார். தங்களது கைப்பேசி எண்களை அவர்கள் பரிமாறிக்கொண்டனர்.

பின்னர் அப்பெண்ணின் ஊருக்குச் செல்லும்போதெல்லாம் அவர்கள் சந்தித்துக்கொண்டனர். அதன்பின் அப்பெண்ணின் ஊருக்கே நிரந்தரமாக வேலை மாற்றலாகிச் சென்றார் அந்த ஆடவர்.

பிறந்த சில நிமிடங்களிலேயே தான் தத்துக்கொடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தன்னைப் பெற்றெடுத்தவர்கள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் சொன்னார்.

தன் சகோதரியே தன் மனைவியாக இருக்கும் தகவலை 'ரெட்டிட்' செய்தித்தளம் வழியாக அவர் பகிர்ந்துகொண்டதாக 'தி மிரர்' செய்தி ஊடகம் குறிப்பிட்டுள்ளது.