சன்னல் வழியாக மகன் விழுந்தது தெரியாமல் 2 கிலோமீட்டர் காரோட்டிச் சென்ற ஆடவர்

2 mins read
bccb605d-561c-4a08-bd2e-57cce2955c08
வழிப்போக்கர் ஒருவர், சாலையில் காயமடைந்த நிலையில் தனியாக இருந்த சிறுவனைக் கண்டு, அவனை மருந்தகத்திற்கு அழைத்துச் சென்றார். - படம்: காவல்துறை

கோலா லிப்பிஸ்: மலேசியாவின் பாகாங் மாநிலத்தைச் சேர்ந்த ஆடவர் ஒருவர், இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்குச் காரோட்டிச் சென்ற பிறகே காரினுள் தம்முடைய மூன்று வயது மகன் இல்லாததை உணர்ந்தார்.

அந்த 36 வயது ஆடவரும் அவருடைய மகனும் தெம்போயாங்கில் உள்ள ஒரு கடையிலிருந்து காரில் புறப்பட்டனர். ஜாலான் லிப்பிஸ் - மெராப்போ சாலையில் அவர்கள் காரில் சென்றனர். பயணத்தின் இடையே தொலைபேசி அழைப்பு வந்ததால் அதற்குப் பதிலளிப்பதற்காகச் சாலையின் ஓரமாக அந்த ஆடவர் தம் காரை நிறுத்தினார்.

அதன் பின்னர் காரை ஓட்டிச் சென்ற அவர், சற்று நேரத்திற்குப் பிறகே காரில் தம்முடைய மகன் இல்லை என்பதை அறிந்தார்.

“அவர் தம் மகனைத் தேடியபோதும் அச்சிறுவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனைத் தொடர்ந்து, புகார் அளிப்பதற்காக அவர் கோலா லிப்பிஸ் காவல் நிலையத்திற்குச் சென்றார்,” என்று லிப்பிஸ் மாவட்டக் காவல்துறைத் தலைவர் இஸ்மாயில் மன் விவரித்தார்.

அங்கு, ஜாலான் லிப்பிஸ் - மெராப்போ சாலை வழியாகச் சென்ற ஒருவர், அச்சிறுவனை ஒரு மருந்தகத்திற்கு அழைத்துச் சென்ற விவரம் அந்த ஆடவரிடம் தெரிவிக்கப்பட்டது.

முகத்தில் காயமடைந்த நிலையில், சாலையில் அச்சிறுவன் தனியாக நின்றிருந்தான். பின்னர் அவனுக்குக் கோலா லிப்பிஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

திங்கட்கிழமை (ஏப்ரல் 7) முற்பகல் 11 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது. அச்சிறுவன் காரின் பின்பக்கச் சன்னல் வழியாகத் தவறி விழுந்தது விசாரணையில் தெரியவந்தது.

சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை செய்துவருவதாகத் திரு இஸ்மாயில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்