மட்ரிட்: உணவு உண்டபின் பணம் செலுத்துவதிலிருந்து தப்பும் நோக்குடன் மாரடைப்பு வந்ததுபோல் பல உணவகங்களில் ஏமாற்றிய 50 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டார்.
அந்த ஆடவர் ஸ்பெயின் நாட்டின் பிளாங்கா வட்டாரத்தைச் சேர்ந்தவர்.
அவரது நாடகம் குறித்து எச்சரிப்பதற்காக, பிளாங்காவிலுள்ள உணவகங்கள் அவரது புகைப்படத்தைப் பரிமாறிக்கொண்டதாக ‘யுஎஸ் சன்’ உள்ளிட்ட பல ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆயினும், கடைசியில் சென்ற மாதம் 37 அமெரிக்க டாலர் செலுத்துவதைத் தவிர்க்க நாடகமாடியபோது அவர் மாட்டிக்கொண்டார்.
இப்படி ஏமாற்ற அவர் எளிய வழிமுறையையே கையாண்டதாகக் கூறப்பட்டது.
உணவகங்களுக்குச் சென்றபின் உணவும் பானங்களும் கொண்டுவருமாறு கேட்பார். உண்டு முடித்ததும் அதற்கான விலைப்பட்டியல் அவரிடம் தரப்படும். அதனைப் பெற்றதும் தன் கையை வைத்து நெஞ்சைப் பிடித்தபடி, தரையில் மயங்கிச் சரிவார்.
பல இடங்களிலும் அவரது இந்த நாடகம் வேலை செய்தது.
இந்நிலையில், ‘எல் புவென் கொமெர்’ என்ற உணவகத்தில் இரண்டாவது முறையாக தம் நாடகத்தை அரங்கேற்றியபோது அவர் மாட்டிக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
நெஞ்சு வலிப்பதாகக் கூறி, அவசர மருத்துவ வண்டிக்குத் தகவல் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். ஆனால், வந்ததோ காவல்துறை வாகனம்!
அலகேன்டி நகரிலும் அவர் இப்படி நாடகமாடி தலைமறைவாக இருந்து வந்த நிலையில், காவல்துறை அவரை அடையாளம் கண்டுகொண்டது.
இதே குற்றத்திற்காக அவர் முன்னர் கைதுசெய்யப்பட்டிருந்தபோதும், சிறுதொகை என்பதால் பல உணவகங்களும் அவரைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டன.
ஆனாலும், அவரை எப்படியாவது கையும் களவுமாகப் பிடிக்க பல உணவகங்களும் சேர்ந்து திட்டமிட்டிருந்தன. தமது ஏமாற்றுக் குற்றங்களுக்காக அவர் ஈராண்டுவரை சிறையில் கழிக்க நேரிடலாம்.

