ஜப்பானின் பிரபல ‌சாலைச் சந்திப்பில் தீமூட்டிய ஆடவர் சரணடைந்தார்

ஜப்பானின் பிரபல ‌சாலைச் சந்திப்பில் தீமூட்டிய ஆடவர் சரணடைந்தார்

படம்: மதர்‌ஷிப்

04 Apr 2026 - 5:13 pm

1 mins read

தோக்கியோ: ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் உள்ள பிரபல ‌ஷிபுயா சாலைச் சந்திப்பில் தீ மூட்டியதாகக் கூறப்படும் ஆடவர் ஒருவர் சிறிது நேரத்தில் தாமாகவே காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

சுற்றுப்பயணிகளிடையே மிகவும் பிரபலமான ‌ஷிபுயா சாலைச் சந்திப்பை ஒவ்வொரு நாளும் குறைந்தது 250,000 முறை மக்கள் கடந்துசெல்கின்றனர்.

போக்குவரத்துச் சமிக்ஞை பச்சையாக மாறும் ஒவ்வொரு முறையும் குறைந்தது 3,000 பேர் அந்தச் சாலைச் சந்திப்பைப் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) இரவு 9 மணியளவில் 50 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் சாலைச் சந்திப்பின் நடுவில் சென்று பிளாஸ்டிக் போத்தலிலிருந்து பெட்ரோலை ஊற்றித் தீ மூட்டியதாகச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

சாலைச் சந்திப்பில் கிட்டத்தட்ட ஒரு சதுர மீட்டர் அளவுக்குப் பற்றியெரிந்த தீயை ‌ஷிபுயா காவல் நிலைய அதிகாரிகள் விரைவாகச் செயல்பட்டு அணைத்தனர்.

சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தினர்.

சம்பவத்தை அடுத்து, கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் கழித்து, தீ மூண்டதற்குப் பொறுப்பேற்றுக்கொண்ட ஆடவர் ஒருவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

அவர் ஐச்சி மாநிலத்தின் நகோயா என்ற பகுதியைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது. ஆடவர் சாயம் பூசும் ஊழியராகப் பணியாற்றுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தீ மூட்டப்பட்ட ‌ஷிபுயா சாலைச் சந்திப்பில் ஆடவர் எழுதியதாகச் சந்தேகிக்கப்படும் கோரிக்கை அடங்கிய அட்டை ஒன்று கண்டெடுக்கப்பட்டதையும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
சாலைசந்திப்புதீதோக்கியோ