தோக்கியோ: ஜப்பானில் கரடிகளால் மரணமடைவோர் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. மக்கள் வாழ்விடங்களில் அதிகமான கரடிகள் காணப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றமும் காடுகள் சார்ந்த பகுதிகளில் மனித நடமாட்டம் குறைவதும் அதற்கு காரணங்களாக கூறப்படுகின்றன.
இவாட்டே நகரின் வடக்குப் பகுதியில் உள்ள காட்டுக்குள் காளான் அறுவடை செய்யச் சென்ற 70 வயது உள்ளூர் ஆடவர் ஒருவர் கரடியால் தாக்கப்பட்டு மரணமடைந்தார். இதனை ஜப்பானிய காவல்துறை அதிகாரி வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) ஏஎஃப்பி ஊடகத்திடம் தெரிவித்தார்.
அவருக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் கரடியால் ஏற்பட்டவை என்று காவல்துறை சந்தேகிக்கிறது எனவும் அவர் கூறினார். ஏப்ரல் 2025ஆம் நிதி ஆண்டின் தொடக்கம் முதல், இதுவரையில் ஆறுபேர் கரடிகளின் தாக்குதலால் மரணமடைந்துள்ளனர். கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த மரண எண்ணிக்கையும் அதே அளவு என்று ஜப்பானின் சுற்றச்சூழல் அமைச்சு வெளியிட்ட விவரங்கள் காட்டுகின்றன.
கரடிகளின் தாக்குதல் என்ற சந்தேகத்தின் காரணமாக கடந்த வாரம் மட்டும் மூன்று மரணங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இவாட்டே பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மற்றோர் ஆடவரின் சடலம் புதன்கிழமை (அக்டோபர் 8) கண்டெடுக்கப்பட்டது. நகானோ நகரின் மத்தியப் பகுதியில் மிருக நகங்களால் காயமடைந்த ஒரு 78 வயது ஆடவரின் உடல் அக்டோபர் 4ஆம் தேதி காணப்பட்டது. அந்த ஆடவர் கரடியால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகித்தாலும் விசாரணை தொடர்கிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் 103 பேர் கரடிகளால் தாக்கப்பட்டுள்ளனர் எனவும் சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.