ஜோகூர் பாரு: நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தை முதியவர் ஒருவர் படமெடுத்துக்கொண்டிருந்தபோது அவர் மீது கார் மோதியதில் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள இஸ்கந்தர் சுல்தான் நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 19) நிகழ்ந்தது.
விபத்தில் சிக்கிய வாகனத்தைத் தவிர்க்க கார் ஓட்டுநர் முற்பட்டபோது அந்த 68 வயது ஆடவர் மீது மோதியதாக ஜோகூர் பாரு காவல்துறையின் உதவி ஆணையர் பல்வீர் சிங் கூறினார்.
“முதியவர் மீது கார் மோதியதற்கு முன்பாக, மற்றொரு கார் கட்டுப்பாடு இழந்து சாலைத் தடுப்பு மீது மோதியது,” என்று திரு சிங் தெரிவித்தார்.
அந்த விபத்துக்குள்ளான காரை முதியவர் படமெடுத்துக்கொண்டிருந்ததாகவும் அப்போது அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த இன்னொரு கார் அவர் மீது மோதியதாகவும் உதவி ஆணையர் சிங் கூறினார்.
இந்தச் சம்பவம் காலை 6.40 மணி அளவில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
முதியவருக்குத் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் சுல்தானா அமினா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் திரு சிங் கூறினார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் மாண்டதாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.