நாயுடன் நடந்து நடந்தே வீடு, கார் வாங்கினார்!

நாயுடன் நடந்து நடந்தே வீடு, கார் வாங்கினார்!

2 mins read
f839d35b-dc00-4f21-9572-afeeb7dd6d2e
நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றதன்மூலம் கடந்த ஆண்டு 120,000 அமெரிக்க டாலர் ஈட்டினார் மைக்கல் ஜோசஃப். படம்: இன்ஸ்டகிராம்/மைக்கல் ஜோசஃப் -
multi-img1 of 2

புரூக்ளின்: நேரிய எண்ணமும் உழைப்பும் இருந்தால் போதும், எந்த வேலையிலும் பணம் ஈட்டலாம் என்று மெய்ப்பித்துள்ளார் அமெரிக்காவின் புரூக்ளினைச் சேர்ந்த ஆடவர் ஒருவர்.

மைக்கல் ஜோசஃப், 34, என்ற ஆடவர் முன்னர் முழுநேர ஆசிரியராகப் பணிபுரிந்தார். அப்போது அவருக்கு ஆண்டு வருமானமாக 38,000 அமெரிக்க டாலர் (S$50,600, ரூ.31 லட்சம்) கிடைத்து வந்தது.

இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு கூடுதல் வருமானத்திற்காக பகுதிநேரமாக நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் வேலையைச் செய்யத் தொடங்கினார் அவர்.

நாய்கள் ஜோசஃப்பின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதைக் கண்ட உள்ளூர்வாசிகள், தங்களது நாய்களையும் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்ல முடியுமா எனக் கேட்டுள்ளனர். அதற்கு ஜோசஃப்பும் உடன்பட்டார்.

நாயை நடைக்கு அழைத்துச் செல்வதன் மூலம் நல்ல வருமானம் ஈட்டலாம் என்பதை உணர்ந்த ஜோசஃப், தமது ஆசிரியப் பணியைத் துறந்து, 2019 ஜூலையில் 'பார்க்சைட் பப்ஸ்' என்ற பெயரில் சொந்த நிறுவனம் தொடங்கினார். அவ்வாண்டு இறுதிக்குள் அவர் 35,000 அமெரிக்க டாலர் ஈட்டினார்.

அரைமணி நேர நடைக்கு 20 டாலர் கட்டணம் வசூலிக்கும் அவர், கடந்த ஆண்டு நாய்களுடன் நடந்தே 120,000 டாலர் (S$158,000, ரூ.98 லட்சம்) ஈட்டியதாக 'நியூயார்க் போஸ்ட்' செய்தி தெரிவிக்கிறது.

ஜோசஃப் இப்போது நியூ ஜெர்சியில் சொந்தமாக வீடு வாங்கிவிட்டார்; புது கார் வாங்கிவிட்டார்; ஒன்றரை வயதேயான தம் மகளின் கல்விச் செலவிற்காகக் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைத்துள்ளார்.

கொவிட்-19 பரவல் காலத்தில் தொழில் சற்று மந்தமடைந்தபோதும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபின் அது மீண்டும் சூடுபிடித்தது. இதனையடுத்து, கடந்த ஆண்டு தமது தொழிலை மேலும் விரிவுபடுத்த முடிவுசெய்த ஜோசஃப், ஒரு செயலியை உருவாக்கியதோடு, பலருக்கு வேலைவாய்ப்பும் அளித்துள்ளார்.

தொழில் முனைவரானபின் தமது வாழ்க்கைமுறை அடியோடு மாறிவிட்டது தமக்கே வியப்பளிப்பதாக உள்ளது என்கிறார் ஜோசஃப்.