பேங்காக்: தாய்லாந்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தாதி ஒருவரை ஓர் ஆடவர் இரண்டு முறை அறைந்து தாக்கியதை அடுத்து, அந்நாட்டில் மருத்துவமனைகளில் நிகழும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து பெருங்கவலை எழுந்துள்ளது.
மருத்துவமனை ஊழியர்களுக்கு எத்தகைய பாதுகாப்பு அளிக்கப்படுகிறது என்று காணொளியைப் பார்ப்போர் தங்களின் ஆதங்கத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
மோசமான நிலையில் இருந்த பாட்டியைப் பார்ப்பதற்காக, சிறுமி ஒருவர் தன் தாயாருடன் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்ல முயற்சி செய்தார்.
ஆனால், கடுமையான சளிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டியைப் பார்க்கச் சென்றால் சிறுமிக்கும் தொற்றும் அபாயம் அதிகம் உள்ளது எனத் தாதி எச்சரித்து சிறுமியையும் அவரின் தாயாரையும் அனுப்பிவிட்டார்.
இதையடுத்து, சிறுமியின் தந்தை அவ்விடத்திற்கு வந்து, தன் மனைவி பிள்ளையிடம் பேசிய தாதி யார் என்று வினவினார். அந்தத் தாதி முன்வந்து தான்தான் பேசியது என்றார்.
உடனே, அந்த ஆடவர் தாதியின் கன்னத்தில் இரண்டு முறை அறைந்தார். அத்துடன், வெளியே சென்று விவகாரத்தைத் தீர்த்துக்கொள்ளலாம் என்றும் மிரட்டினார்.
ராயோங் மருத்துவமனையில் பிப்ரவரி 16ஆம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட அந்தத் தாதி கூடுதல் விவரங்களைப் பகிர்ந்துகொண்டார். தமக்கு முன் இன்னொரு தாதி இரண்டு முறை சிறுமியிடமும் சிறுமியின் தாயாரிடமும் மூதாட்டியைப் பார்க்க முடியாது என்று எச்சரித்து உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டதாகத் தெரிவித்தார்.
பின்பு, தாக்கப்பட்ட தாதி அவ்விருவரிடமும் அதேபோல் கூறியதுடன், “உங்கள் மகளுக்கும் தொற்றிவிடலாம். அப்படி நடந்தால் நீங்கள் இரண்டு பேரை இழக்கத் தயாரா?” என்று கேட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அதையடுத்து சிறுமியின் தந்தை தாதியைத் தாக்கினார். தன் மனைவியிடம் சற்று பணிவுடன் பேசியிருந்தால் தான் அறைந்திருக்க மாட்டார் என்று ஆடவர் கூறினார்.
இதையடுத்து, மூத்த தாதி ஒருவர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில், ஆடவருக்கு எதிராக மருத்துவமனையின் நிர்வாகம் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக உறுதியளித்துள்ளது. தனது செயலை எண்ணி ஆடவர் வருத்தம் தெரிவிக்கவில்லை என்று கூறிய அந்தத் தாதி, தாம் வழக்கைக் கைவிடப் போவதில்லை என்றார்.

