கிள்ளானில் ஆடவர் சுட்டுக்கொலை

1 mins read
சம்பவம் உறுதிசெய்யப்பட்டால் மலேசியாவில் அண்மைய நாள்களில் நடந்த மூன்றாவது துப்பாக்கிச்சூடு
fa5393ec-a28c-4d37-964c-cc6999819ba2
துப்பாக்கிக்காரர் பாதிக்கப்பட்டவரை நோக்கி ஆறு முறை சுட்டதாக ஃபேஸ்புக்கில் ஒருவர் பதிவிட்டுள்ளார். - படம்: த ஸ்டார்/ஏஷியா நியூஸ் நெட்வொர்க்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் கிள்ளான் வட்டாரத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) பிற்பகல், ஆடவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

ஜாலான் மேருவில் உள்ள மோட்டார்சைக்கிள் கடைக்கு அருகே அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் இருந்த ஆடவரை நோக்கி ஆறுமுறை துப்பாக்கியால் சுடப்பட்டதாக ஃபேஸ்புக்கில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

“மேரு மக்களே, கவனமாயிருங்கள். சற்று முன்னர் இங்கு ஒரு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது,” என்று அவர் குறிப்பிட்டுள்ள பதிவு இணையத்தில் வேகமாகப் பரவியதாக ‘சினார் ஹரியான்’ நாளேடு தெரிவித்துள்ளது.

மேலும் பலர், அந்தச் சம்பவத்தைப் பார்த்ததாகவும் அதுபற்றிக் கேள்விப்பட்டதாகவும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தை உறுதிசெய்து காவல்துறை இன்னும் தகவல் வெளியிடவில்லை.

மலேசியாவில் அண்மையில் ஜூன் 13, 17ஆம் தேதிகளில் முறையே பிரிக்ஃபீல்ட்ஸ், செராஸ் வட்டாரங்களில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் நடந்தன.

குறிப்புச் சொற்கள்