இந்தத் தொழில்நுட்ப உலகில் தங்கள் குழந்தைகள் திரையில் செலவழிக்கும் நேரத்தைக் கட்டுப்படுத்துவது என்பது பெற்றோருக்குப் பெரும்பாடாக இருக்கிறது.
இந்நிலையில், இரவு 1 மணியைத் தாண்டியும் கைப்பேசியில் இணைய விளையாட்டில் மூழ்கியிருந்த தன் மகனுக்கு ஆடவர் ஒருவர் நூதன தண்டனை அளித்து, பாடம் புகட்டியுள்ளார்.
சீனாவின் ஷென்ஸென் நகரைச் சேர்ந்த ஹுவாங் என்ற அந்த ஆடவர் இரவு 1.30 மணிக்குத் தன் 11 வயது மகன் கைப்பேசியில் காணொளி விளையாட்டு விளையாடியதைக் கண்டார்.
இதனையடுத்து, அவனுக்குப் பாடம் கற்பிக்க முடிவுசெய்தார் ஹுவாங்.
அவன் விரும்பும்வரை இணைய விளையாட்டு விளையாட அவர் அனுமதித்தார். ஆனால், உறங்கவே கூடாது என்பதுதான் நிபந்தனை.
காலை 6.30 மணிக்குப் பார்த்தபோதும் அவன் மகிழ்ச்சியோடு விளையாடிக்கொண்டிருந்தான். நண்பகல் 1.30 மணி ஆயிற்று. களைப்படைந்த அவனை உறக்கம் சுண்டியிழுத்தது.
ஆனால், ஹுவாங் விடவில்லை. அவனை உறங்கவிடாமல் கைப்பேசியில் விளையாடும்படி சொல்லிக்கொண்டே இருந்தார்.
மேலும் ஐந்து மணி நேரம் கடந்தது. அதாவது 17 மணி நேரமாக விளையாடிவிட்டான். அதன்பிறகு அவனால் முடியவில்லை என்பதால் அழத் தொடங்கினான்.
தொடர்புடைய செய்திகள்
தன்னை மன்னித்துவிடும்படி தன் தந்தையிடம் கதறினான். இனிமேல் இரவில் கண்விழித்து விளையாட மாட்டேன் என உறுதியளித்து, தன் தந்தைக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினான்.
"இரவு 11 மணிக்குமுன் உறங்கச் சென்றுவிடுவேன். இனி இரவு படுக்கச் செல்லுமுன் கைப்பேசியிலோ பொம்மைகளை வைத்தோ விளையாட மாட்டேன் என உறுதியளிக்கிறேன்," என்று அக்கடிதத்தில் அவன் எழுதியிருந்ததாக 'எக்ஸ்பிரஸ்' செய்தி குறிப்பிட்டுள்ளது.
நடந்தது முழுவதையும் 'டூயின்' என்ற சீனச் சமூக ஊடகச் செயலியில் ஹுவாங் பகிர்ந்துகொண்டார். தனது நடவடிக்கை நல்ல பலனளித்ததாகக் குறிப்பிட்ட அவர், ஆனாலும் அவ்வழியைக் கைக்கொள்ள வேண்டாம் என மற்றவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.