தோக்கியோ: ஃபூசா என்ற பகுதியில் உள்ள குடியிருப்பில், ஆடவர் ஒருவர் சுத்தியலைக் கொண்டு சாலையில் சென்றுகொண்டிருந்த மேல்நிலை பயிலும் மாணவரைத் தலையில் தாக்கியதோடு, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த ஆறு காவல்துறை அதிகாரிகள் மீது அடையாளம் தெரியாத ஏதோ ஒருவித நீரை பீய்ச்சியடித்துள்ளார்.
அக்காரியங்களைச் செய்துவிட்டு, 40 வயது ஆடவர் அவரது வீட்டில் தடுப்புகளை அமைத்துக்கொண்டு, ஒளிந்துகொண்டார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
புதன்கிழமை (ஏப்ரல் 29) காலை 7.20 மணிக்கு நடந்த சம்பவத்தில் காயம் அடைந்த அந்த மாணவரும், அறுவரில் மூன்று காவல்துறையினரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்பதை காவல்துறை உறுதிசெய்தது.
மேற்கு தோக்கியோவில் ஃபூசா ரயில் நிலையத்தின் அருகில் இச்சம்பவம் நிகழ்ந்தது. மாணவர் தாக்கப்படுவதை நேரில் பார்த்த ஒருவர் அவசர உதவி கேட்டு காவல்துறையை அழைத்துள்ளார்.
ஆடவரின் தாயிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, அந்த ஆடவர் வீட்டிலிருந்து கத்தியை எடுத்துவந்து, அவர்களை மிரட்டியதாகவும் காவல்துறை குறிப்பிட்டது.

