தாப்பா: டிக் டாக் நேரலை ஒன்றின்போது, காம்போங் லுபுக் கஹாருவின் பழங்குடி கிராமத் தலைவர் மீது சுமத்தப்பட்ட அவதூறு தொடர்பான விசாரணைக்கு உதவ, 30 வயது மதிக்கத்தக்க ஆடவரை நான்கு நாள் விசாரணைக் காவலில் வைக்க வெள்ளிக்கிழமை (ஜூன் 12) நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த ஆடவர் காலை 8.50 மணியளவில் காவல்துறையின் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார்.
முன்னதாக, அந்த அவதூறுச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையிடம் 11 புகார்கள் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் ஈப்போவில் உள்ள வீட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக தாபா மாவட்ட காவல்துறைத் தலைவர் அப்துல் மாலிக் ஹாசிம் கூறினார்.
மலையேற்றப் பெண்ணான ஜஸ்லிண்டா சலூதீனை கடந்த இரண்டு வாரங்களாகத் தம்வசம் வைத்திருப்பதாகவும் இந்த விவகாரம் வெளியுலகிற்குத் தெரியாமல் இருந்திருந்தால் இந்நேரம் அந்தப் பெண்ணைத் தாம் மணமுடித்திருக்கக்கூடும் என்றும் பழங்குடி கிராமத் தலைவரான முகமது அஸ்மதி அப்துல்லா கூறியதாக வெளியான நேரலை ஒளிபரப்பிற்குப் பின்னர் அந்த ஆடவர் பிரபலமானார்.
அந்த சர்ச்சைக்குரிய பதிவு தொடர்பில் பின்னர் அவர் காணொளி மூலம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
திருவாட்டி ஜஸ்லிண்டா, மலையேற்றத்திற்குச் சென்றபோது திடீரென காணாமல் போனார். பழங்குடிக் கிராம மக்களிடம் அவர் பத்திரமாக இருப்பது பற்றி 14 நாள்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.

