கடந்த மாதம் 13ஆம் தேதியில் இருந்து 28ஆம் தேதிவரை விவோசிட்டி, ஹார்பர்ஃபிரன்ட் சென்டர் கடைத்தொகுதிகளில் பணிபுரிந்தோர்க்கான கட்டாய கொவிட்-19 பரிசோதனை இன்று தொடங்கியது.
அந்த நாள்களில் பணியாற்றிய துப்புரவாளர்கள், பாதுகாவல் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், பாதுகாப்பு இடைவெளித் தூதர்கள் ஆகியோரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்று விவோசிட்டி நிர்வாகத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்விரு கடைத்தொகுதிகளிலும் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்று அவற்றின் உரிமையாளரான மேப்பில்ட்ரீ நிறுவனம் தெரிவித்தது.
"பணியாளர்கள், குத்தகைதாரர்கள், கடைக்காரர்கள் ஆகிய அனைவரின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் பாதுகாத்திட உதவும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை இடம்பெறுகிறது," என்று அதன் பேச்சாளர் கூறினார்.
குறிப்பாக அறிவுறுத்தப்பட்டால் ஒழிய, கடைக்காரர்கள் பரிசோதனை செய்துகொள்ளத் தேவையில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
விவோசிட்டியின் இரண்டாம் தளத்தில் உள்ள கார் நிறுத்தப் பூங்காவில் பரிசோதனை இடம்பெறுகிறது.
பரிசோதனை குறித்தும் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரம் குறித்தும் குறுஞ்செய்தி வந்ததாக அந்தக் கடைத்தொகுதிகளின் பணியாளர்கள் கூறினர்.
பரிசோதனை நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்படுவதாகவும் மொத்தச் செயல்முறைக்கும் ஒருவர்க்கு 15 நிமிடங்களுக்குமேல் ஆகவில்லை என்றும் சொல்லப்பட்டது.
கொவிட்-19 நோயாளிகள், தொற்று கண்டிருந்தபோது சென்ற இடங்களில் விவோசிட்டியும் ஒன்று. அத்தகைய ஒருவர் கடந்த மாதம் 18ஆம் தேதி மாலை 6 மணியில் இருந்து இரவு 7.50 மணிவரை அக்கடைத்தொகுதியில் இருந்ததாகக் கூறப்பட்டது.
எச்சில்/சளி மாதிரிப் பரிசோதனை வரும் வெள்ளிக்கிழமை நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரிசோதனை செய்துகொண்டபின் பணியாளர்கள் வேலையைத் தொடரலாம். பரிசோதனை முடிவுகள் மூன்று நாள்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

