பெண்களுக்குக் கட்டாய ராணுவச் சேவை பரிசீலனையில் இல்லை: தென்கொரியா

பெண்களுக்குக் கட்டாய ராணுவச் சேவை பரிசீலனையில் இல்லை: தென்கொரியா

படம்: ஏஎஃப்பி

12 Oct 2026 - 9:07 pm

1 mins read

சோல்: தென் கொரியாவில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை வேகமாகச் சரிந்து வரும் நிலையிலும், பெண்களுக்குக் கட்டாய ராணுவப் பயிற்சி அளிப்பது குறித்துத் தற்போதைக்குப் பரிசீலிக்கப்படவில்லை என்று அந்நாட்டின் ராணுவ மனிதவள நிர்வாக ஆணையர் ஹொங் சோ-யங் தெரிவித்துள்ளார்.

தேசியத் தற்காப்புக் குழுத் தணிக்கைக் கூட்டத்தில் திங்கட்கிழமை (அக்டோபர் 12) பேசிய அவர், 2040ஆம் ஆண்டிற்குப் பிறகு ராணுவச் சேவையாற்றும் வயதுடைய ஆண்களின் எண்ணிக்கை மேலும் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

எனவே, பெண்களுக்கு உடனடியாகக் கட்டாய ராணுவச் சேவைச் சட்டத்தைக் கொண்டுவருவதற்குப் பதிலாக, பெண் ராணுவ அதிகாரிகளின் விகிதத்தைப் படிப்படியாக அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார். அத்துடன், இது தொடர்பாகப் பொதுமக்களின் கருத்தொற்றுமையைப் பெறுவது மிகவும் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளையில், விளையாட்டாளர்களுக்கான ராணுவச் சேவை விலக்கு, மாற்றுச் சேவைத் திட்டங்களைப் படிப்படியாகக் குறைத்து, இறுதியில் அவற்றை முற்றிலும் ரத்து செய்வதே தற்காப்பு அமைச்சின் இலக்கு என்று அவர் உறுதிப்படுத்தினார்.

அண்மையில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற தென் கொரியக் காற்பந்து அணியைச் சேர்ந்த சிலர், கட்டாய ராணுவச் சேவையை அலட்சியப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தது குறித்து அவர் தனது வருத்தத்தைப் பதிவு செய்தார்.

குறிப்புச் சொற்கள்
தென் கொரியாராணுவம்பெண்கள்