தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

15 மாணவர்களின் உயிரைப் பறித்த விபத்து; பேருந்து ஓட்டுநருக்கு 18 அழைப்பாணை

2 mins read
2a957224-8529-48e0-ab4a-81d689935b5f
மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசிய நெடுஞ்சாலையில் சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற பேருந்து திங்கட்கிழமை (ஜூன் 9) அதிகாலை மற்றொரு வாகனத்துடன் விபத்துக்குள்ளானது.

அச்சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 33 பேர் காயமடைந்தனர். விபத்துக்குள்ளான பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு 18 அழைப்பாணைகள் அனுப்பியுள்ளதாகப் புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை, அமலாக்கப் பிரிவு இயக்குநர் தெரிவித்தார்.

அவற்றில் பேருந்தை வேகமாக ஓட்டிய குற்றத்திற்காக 13 அழைப்பாணைகளும் மூன்று இருக்கை வார் அணியாததற்காகவும் அனுப்பப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையே, மலேசிய அரசாங்கம் கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துவதைக் கட்டாயமாக்குவது தொடர்பில் பரிசீலித்து வருகிறது.

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சிகளின் ஓர் அங்கமாக, புதிய கொள்கையை அது வரைவதாகக் கூறப்பட்டுள்ளது.

புதிய சட்டம் நடப்புக்கு வரும்போது அதிலிருந்து தப்புவதற்கோ அச்சட்டத்தை யாருக்கும் சாதகமாக வளைப்பதற்கோ உதவக்கூடிய அம்சங்கள் ஏதும் இல்லாமலிருப்பதை உறுதிசெய்ய அது முழுமையாக, கவனமாகப் பரிசீலிக்கப்படும் என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் கூறினார்.

சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதை அரசாங்கம் ஒருபோதும் தளர்த்தாது என்றார் அவர்.

சாலையைப் பயன்படுத்துவோரைப் பாதுகாக்கத் தாங்கள் கடப்பாடு கொண்டிருப்பதாகக் கூறிய அவர், குறிப்பாக அலட்சியமாக வாகனத்தை ஓட்டுவோரிடமிருந்தும் தரநிலைகளுக்குப் பொருந்தாத கனரக வாகனங்களிடமிருந்தும் சாலையைப் பயன்படுத்துவோரைப் பாதுகாப்போம் என்று தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மலேசிய நிலவழிப் பொதுப் போக்குவரத்து ஆணையம் (APAD), விபத்துக்குள்ளான பேருந்தை இயக்கிய நிறுவனத்திற்கு, விதிமீறல்கள் இல்லை என்பதை விளக்கிக்கூறும்படி உத்தரவிடும் கடிதத்தை அனுப்பியுள்ளது.

அந்தப் பேருந்திலும், நிறுவனத்தின் மீதும் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ), பாதுகாப்புச் சோதனை, தணிக்கை நடவடிக்கையை மேற்கொள்வதாக அமைச்சர் ஆண்டனி லோக்கும் கூறியுள்ளார்.

கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் பேராக் மாநிலம், கெரிக் எனும் சிற்றூரில் தாசிக் பாண்டிங் அருகே அந்த விபத்து நடந்ததாகக் கூறப்பட்டது.
கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் பேராக் மாநிலம், கெரிக் எனும் சிற்றூரில் தாசிக் பாண்டிங் அருகே அந்த விபத்து நடந்ததாகக் கூறப்பட்டது. - படம்: பெர்னாமா

விசாரணை நிறைவடைந்ததும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார். சம்பவத்தில் பறிபோன ஒவ்வோர் உயிரும் அவரவர் குடும்பத்திற்கு மட்டுமன்றி நாட்டின் வருங்காலத்திற்கும் பேரிழப்பு என்றார் அவர்.

மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் சமரசத்துக்கு ஒருபோதும் இடமில்லை என்பதை இந்த விபத்து நினைவூட்டுவதாகத் திரு லோக் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்