ஜேஜூ விமான விபத்துக்குப் பதில் தேடும் மாண்டோரின் குடும்பங்கள்

2 mins read
22242493-d99e-4f0e-aa4a-c1cc8139c627
கடந்த ஆண்டு டிசம்பரில் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த ஜேஜூ விமானம் விபத்துக்குள்ளானது. - படம்: ராய்ட்டர்ஸ்

முவான், தென்கொரியா: தென்கொரியாவை உறையவைத்த ஜேஜூ விமான விபத்து நேர்ந்து ஓராண்டு கடந்துள்ள நிலையிலும் உயிரிழந்தோரின் பெற்றோர் பல கேள்விகளுக்கான பதிலை இன்னும் தேடிவருகின்றனர்.

தாய்லாந்திலிருந்து புறப்பட்ட ஜேஜூ விமானம் 2216 முவான் அனைத்துலக விமானத்தில் தரையிறங்கத் தயாரானபோது பறவைக் கூட்டத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

2024ஆம் ஆண்டு நேர்ந்த கோர விபத்தில் 179 பேர் மாண்டனர். தென்கொரியாவில் ஏற்பட்ட ஆக மோசமான விபத்தாகவும் அது வகைப்படுத்தப்பட்டது.

விமானத்தின் ஆகக் கடைசி இருக்கைகளில் அமர்ந்திருந்த இரண்டு விமான ஊழியர்கள் மட்டும் தப்பித்தனர்.

விமானியின் தவற்றால் விபத்து நேர்ந்ததாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். ஆனால் விசாரணை நடந்த விதம் குறித்து பெருத்த அவநம்பிக்கை இருப்பதாக மாண்டோரின் உற்றார் உறவினர்கள் கூறினர்.

அவர்களின் கேள்வி எல்லாம் ஒன்றுதான். அனைத்துலக விமானப் பாதுகாப்புத் தரநிலைகளையும் மீறி ஓடுபாதையின் இறுதியில் ஏன் ஒரு கான்கிரீட் சுவர் இருந்தது?

விபத்தைத் தொடர்ந்து வணிக விமானங்கள் முவான் விமான நிலையத்தில் சேவை வழங்குவதை நிறுத்திக்கொண்டன. அப்படியிருந்தும் ஜேஜூ விமான விபத்தில் மாண்டோரின் குடும்பங்கள் புறப்பாட்டு முனையத்தின் இரண்டாம் தளத்தில் இரவும் பகலும் கூடாரமிட்டு தங்கிவருகின்றனர்.

உயிரிழந்தோரைச் சித்திரிக்கும் நீல நாடாக்கள் விமான நிலையத்தைச் சுற்றியுள்ளன. மாண்டோரின் நினைவாக வெள்ளைக் கடிதங்கள் படிக்கட்டுகளை நிரப்பியுள்ளன.

ஜேஜூ விமான விபத்தில் மாண்டோர் நினைவாக விமான நிலையத்தில் நீல நாடாக்கள் கட்டப்பட்டுள்ளன.
ஜேஜூ விமான விபத்தில் மாண்டோர் நினைவாக விமான நிலையத்தில் நீல நாடாக்கள் கட்டப்பட்டுள்ளன. - படம்: ஏஎஃப்பி
மாண்டோரின் குடும்பத்தினர் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் கடிதங்களை முவான் விமான நிலையத்தில் வைத்துள்ளனர்.
மாண்டோரின் குடும்பத்தினர் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் கடிதங்களை முவான் விமான நிலையத்தில் வைத்துள்ளனர். - படம்: ஏஎஃப்பி

‘நாட்டு மக்களைக் காப்பாற்றும் திறமை இல்லாத நாடு ஒரு நாடல்ல. எங்களுக்குப் பதில் வேண்டும்!’ என்ற வாசகங்கள் கொண்ட பதாகைகள் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ளன.

விபத்து குறித்து ஜூலை மாதம் வெளியிடப்பட்ட இடைக்கால விசாரணை குடும்பங்களின் சினத்தை மேலும் தூண்டியுள்ளது.

குறிப்புச் சொற்கள்