ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகருக்குத் தென்மேற்கில் உள்ள பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் மாண்டனர். மேலும் 10 பேர் காயமுற்றனர் என்று தென்னாப்பிரிக்கக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி துப்பாக்கிச்சூடு நள்ளிரவு கடந்து 1 மணிக்கு நடத்தப்பட்டது என்று அதிகாரிகள் கூறினர்.
வெள்ளை சிற்றுந்து (மினிபஸ்) வாகனத்திலும் வெள்ளி நிற காரிலும் வந்த முகம் தெரியாத 12 பேர் திடீரெனத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியபோதும் அவர்கள் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டதாகக் காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
விசாரணை மூலம்தான் துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் உறுதிப்படுத்தப்படும் என்றனர் அதிகாரிகள். துப்பாக்கிக்காரர்களை அதிகாரிகள் தேடிவருகின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்தோர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
சம்பவம் நேர்ந்த பெக்கர்ஸ்டேல் பகுதியில் வேலையின்மை விகிதமும் வறுமையும் அதிகம் என்று கூறப்படுகிறது. தங்கச் சுரங்கம் அங்குக் குறைந்துவருவதால் மக்கள் அந்த நிலைக்குத் தள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆப்பிரிக்காவின் ஆகப் பெரிய பொருளியலான தென்னாப்பிரிக்காவில் ஆக அதிகக் கொலைச் சம்பவங்கள் நடக்கின்றன. அந்நாட்டில் நாள் ஒன்றுக்குக் கிட்டத்தட்ட 60 கொலைகள் நடப்பதாகக் கூறப்படுகிறது.

