பெல்ஜியத்தில் ரயில்-பள்ளிப் பேருந்து மோதலில் பலர் உயிரிழப்பு

பெல்ஜியத்தில் ரயில்-பள்ளிப் பேருந்து மோதலில் பலர் உயிரிழப்பு

2 mins read
d0043c51-6372-4625-a66a-b604799b88e1
புகன்ஹாவ்ட்டில் பள்ளிப் பேருந்துடன் ரயில் மோதியது. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

புரசல்ஸ்: வட பெல்ஜியத்தில் செவ்வாய்க்கிழமை (மே 26) ரயில் ஒன்று பள்ளிப் பேருந்தின்மீது மோதியதில் பலர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிள்ளைகள் இருவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டதாக பெல்ஜியத்தின் துணைப் பிரதமர் மேக்சிம் பிரெவோ தெரிவித்தார்.

“புகன்ஹாவ்ட்டில் இன்று காலை ரயிலுக்கும் பள்ளிப் பேருந்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் பிள்ளைகள் இருவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டனர்,” என்று திரு மேக்சிம் பிரெவோ எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

அந்தப் பேருந்தில் ஏழு பிள்ளைகள் இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மோசமாக சேதமடைந்த அந்த ‘மினிபஸ்’ வகை பேருந்து ஒன்று ரயில்வே பாதைக்கு அருகே பக்கவாட்டில் கிடந்தது பெல்ஜிய ஊடகங்களில் வெளியான படங்களில் தெரிந்தது. அருகே அவசரச் சேவை ஊழியர்கள் கூடாரங்களை அமைத்ததும் காணப்பட்டது.

விபத்து, புகன்ஹாவ்ட் கிராமத்தில் இருக்கும் ரயில்-வாகனச் சந்திப்பில் நிகழ்ந்தது. ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கேட்டதற்கு, விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை பெல்ஜியக் காவல்துறை வெளியிட மறுத்தது.

ரயில் சேவைகளை இயக்கும் இன்ஃபிராபெல் நிறுவனத்தின் பேச்சாளரான ஃபிரிடரிக் சாக்ரே, “மோதல் படுமோசமாக இருந்தது,” என்று குறிப்பிட்டார்.

சம்பவத்தால் தாம் மனமுடைந்து போய்விட்டதாக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வோன் டெர் லேயன் சொன்னார்.

“உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஐரோப்பா, இன்று பெல்ஜியத்துடன் சேர்ந்து சோகத்தில் மூழ்கியுள்ளது,” என்று அவர் இணையத்தில் பதிவிட்டார்.

பெல்ஜியத்தின் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் குவின்டின், உயிரிழந்தோரையும் அவர்களின் அன்புக்குரியவர்களையும் எண்ணி வருந்துவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

“காயமடைந்தோர் மனவலிமை பெற நான் வேண்டுகிறேன்,” என்றும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டார்.

விபத்தில் கொல்லப்பட்ட பிள்ளைகள் இருவரில் ஒருவருக்கு வயது 12 என்றும் மற்றொருவருக்கு வயது 15 என்றும் பிபிசி போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்