கோலாலம்பூர்: மலேசியாவின் ஊழியர் சேமநிதி (EPF) உறுப்பினர்கள் பலரிடம் வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு தங்களைப் பார்த்துக்கொள்ளத் தேவையான சேமிப்பு போதுமான அளவில் இல்லை என்று தெரிய வந்துள்ளது.
கஸானா ஆய்வுக் கழகம் (KRI) அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.
ஊழியர் சேமநிதி, சிங்கப்பூரின் மத்திய சேமநிதியைப் போன்றதாகும். மலேசிய ஊழியர்களின் கட்டாயச் சேமிப்புத் திட்டங்கள், அவர்களின் ஓய்வூதியம் போன்றவற்றை ஊழியர் சேமநிதி கவனிக்கிறது.
90 விழுக்காட்டு ஊழியர் சேமநிதி உறுப்பினர்களுக்கு வயது 30 அல்லது அதற்கும் குறைவு. வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு சீராக வாழத் தேவைப்படும் தொகை அவர்களிடம் இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் ஒருவர் 55 வயதை எட்டியதும், ஓய்வுபெற்ற பிறகு குறைந்தது 240,000 ரிங்கிட் (73,060 வெள்ளி) சேமிப்பு இருப்பது நல்லது என்று கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த இலக்கை அடைய தனிநபர்கள் 30 வயதை எட்டுவதற்குள் குறைந்தது 35,000 ரிங்கிட் தொகையைச் சேமிக்க வேண்டும். ஆனால், 30 வயதுக்குக்கீழ் உள்ள பெரும்பாலோர் பின்தங்கியிருப்பதாக ‘குடும்பங்களின் நிலை 2024: குடும்பங்களும் கொள்ளைநோய்ப் பரவல் 2019-2022’ (The State of Households 2024: Households and the Pandemic 2019-2022) என்ற பெயரைக் கொண்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 30லிருந்து 54 வயதுக்கு உட்பட்ட தனிநபர்களும் ஓய்வுக்காலத்தைச் சமாளிக்க அதிகம் தயாராய் இல்லை என்று கஸானா ஆய்வுக் கழகம் கணடறிந்துள்ளது.
கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலால் நிலைமை மேலும் மோசமடைந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில் மலேசியப் பிரதமர்களாக இருந்த முகைதீன் யாசின், இஸ்மாயில் சப்ரி இருவரும், பொருளியல் நெருக்கடியைச் சமாளிக்க ஓய்வூதிய நிதியிலிருந்து பணம் எடுத்துக்கொள்ள அனுமதித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
சம்பள உயர்வை அதிகரிப்பது, ஊழியர் சேமநிதியில் கூடுதல் தொகை நிரப்புவது, வேலையிலிருந்து ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் பிரச்சினையைக் கையாளலாம் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.