ஜகார்த்தா: இந்தோனீசியா முழுவதும் பற்றி எரியும் காட்டுத் தீயிலிருந்து, அழியும் ஆபத்தான நிலையில் உள்ள பல ஓராங் ஊத்தான்கள் அண்மைய வாரங்களில் மீட்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இந்தோனீசியாவின் மேற்கு கலிமந்தான் பகுதியில் ஆகஸ்ட் 6 முதல் அக்டோபர் 19 வரையிலான காலகட்டத்தில் 51 ஓராங் ஊத்தான்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்தன. கலிமந்தானில் மீட்கப்பட்ட ஓராங் ஊத்தான்களின் எண்ணிக்கை 96 வரை இருக்கலாம் என வனத்துறை அமைச்சு கூறியது.
போர்னியோ, சுமத்ரா தீவுகளில் ஏற்பட்டுள்ள இக்காட்டுத் தீ, ‘எல் நினோ’ பருவநிலையால் மேலும் மோசமடைந்துள்ளது. அதனால் உருவான அடர்ந்த நச்சுப் புகைமூட்டம் காரணமாக இந்தோனீசியா, மலேசியா, சிங்கப்பூர், கிழக்குத் திமோர் ஆகிய நாடுகளில் சுவாசப் பிரச்சினைகளும் அதிகரித்துள்ளன.
சுவிட்சர்லாந்தின் ‘ஐக்யூஏர்’ (IQAir) அமைப்பின் தரவுகளின்படி, உலகின் மிக மோசமான காற்றுத் தரத்தைக் கொண்ட முதன்மை நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூரும் கோலாலம்பூரும் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன. ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 18) நிலவரப்படி, காற்றுத் தூய்மைக்கேடு தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.
