தோக்கியோ: தெற்கு ஜப்பானின் குமாமோட்டா மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) நிகழ்ந்த 7.1 ரிக்டர் நிலநடுக்கத்தில் சிக்கி பலர் உயிரிழந்துவிட்டதாகத் தொலைக்காட்சி செய்தி ஒன்று குறிப்பிட்டது.
அந்த நிலநடுக்கத்தில் குறைந்தபட்சம் ஐம்பது பேர் காயமடைந்ததாகவும் அது தெரிவித்தது.
நிலநடுக்கம் உலுக்கியதால் ஒரு பகுதி இடிந்து விழுந்த கடைத்தொகுதிக்குள் சிலர் சிக்கித் தவித்தனர்.
ஏயோன் என்னும் அந்தக் கடைத்தொகுதியில் ஏற்பட்ட ஒரு வெடிப்பு காரணமாக அங்கிருந்த பலர் மாண்டிருக்கலாம் என உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஃபூஜி தொலைக்காட்சி தெரிவித்தது.
அந்தக் கடைத்தொகுதிக்குள் 20 முதல் 30 வரையிலான ஊழியர்கள் சிக்கியதாகவும் அவர்களை நெருங்க இயலவில்லை என்றும் அரசாங்க ஒலிபரப்பு நிறுவனமான என்எச்கே கூறியது.
இதற்கிடையே, நிலநடுக்கப் பாதிப்புகள் குறித்து ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சி செய்தியாளர்களிடம் பேசினார்.
நிலநடுக்கப் பகுதியில் சேதத்தை முழுமையாக மதிப்பிடுவதில் அதிகாரிகள் முழுமூச்சுடன் ஈடுபட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
“பொதுமக்கள் காயமடைந்திருப்பது பற்றி எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மின்தடையும் தீவிபத்துகளும் ஏற்பட்டுள்ளன. அந்த வட்டாரங்களில் உள்ள சாலைகளும் பாலங்களும் சேதமுற்றதோடு கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன,” என்றார் திருவாட்டி தக்காய்ச்சி.
பத்தாண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட ஒரு கடுமையான நிலநடுக்கத்தில் பலர் உயிரிழந்த அதே பகுதியில் இந்த நிலநடுக்கமும் ஏற்பட்டது.
ஏறத்தாழ 300,000 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதாக ஜப்பானின் பேரிடர் நிர்வாக அமைப்பு தெரிவித்தது.
அதேவேளை, பேரிடர் மீட்புப் பணிகளில் உதவ 3,600 வீரர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று பிரதமர் தக்காய்ச்சி கூறினார்.

