தென் கொரியாவில் வரலாறு காணாத காட்டுத்தீக்கு 26 பேர் பலியாகியுள்ளனர், 30 பேர் காயமடைந்தனர். காயமடைந்தோரில் 8 பேரின் நிலைக் கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாண்டோரில் பெரும்பாலோர் 60 வயது முதல் 70 வயதுக்கும் மேற்பட்ட வயதுடையவர்கள்.
இம்மாதம் 21ஆம் தேதி சன்சியொங் பகுதியில் தொடங்கிய காட்டுத்தீ பலத்த காற்றால் அருகில் உள்ள ஆறு பகுதிகளுக்கு மளமளவென பரவியது. காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
காட்டுத்தீ கலாசாரத் தலங்களுக்குப் பெரிய அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. உய்சொங் வட்டாரத்தில் 1300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த கௌன்சா ஆலயம் தீயில் கருகியது.
மர அச்சுக் கட்டைகள், ஓவியங்கள் உள்பட 10க்கும் மேற்பட்ட அரிய பொருள்களை அதிகாரிகள் முக்கிய கோயில்களிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டுசென்றனர்.
பல்வேறு இடங்களில் மூண்ட காட்டுத்தீக்கு உள்ளூர்வாசிகளின் நடவடிக்கைகள் காரணமாகயிருக்கலாம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
உய்சொங்கில் எரிந்துகொண்டிருக்கும் ஆக பெரிய காட்டுத்தீ, ஈடுகாட்டில் உள்ள ஒரு கல்லறைக்கு உற்றார் உறவினர்கள் சென்றபோது மூண்டதாக நம்பப்படுகிறது. அந்த ஈடுகாட்டில் தீமூட்டும் லைட்டர் கருவி இருந்ததை காணொளி ஆதாரம் காட்டுகிறது.
கடுமையாக எரிந்துகொண்டிருக்கும் காட்டுத்தீயை அணைக்க ஹெலிகாப்டர்கள், தீயணைப்பு வாகனங்களுடன் 5,000க்கும் அதிகமான அதிகாரிகள் போராடிவருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இதர பகுதிகளில் உள்ளூர்வாசிகள் குப்பையை எரித்ததால் காட்டுத்தீ மூண்டதாகக் கூறப்படுகிறது.
புற நகர் வட்டாரங்களின் குடியிருப்பாளர்கள் கழிவுகளை எரிப்பது வழக்கம். அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்று அரசாங்க அதிகாரிகள் குடியிருப்பாளர்களிடம் அறிவுறுத்திவருகின்றனர். அரசாங்க அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று குடியிருப்பாளர்களையும் எச்சரிக்கின்றனர்.
காட்டுத்தீ மூள்வதற்குக் காரணமானோருக்கு மூவாண்டுச் சிறைத் தண்டனை அல்லது 30 மில்லியன் வான் வரையிலான அபராதத்தைத் தென்கொரியா விதிக்கிறது.

