இலங்கையில் காட்டு யானைகளால் கிராம மக்களில் பலர் பலி

1 mins read
2b924b5e-9e42-4a25-9228-afb404c951fd
இலங்கையில் காட்டு யானைகளிடமிருந்து கிராம மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. - படம்: ஏஎஃப்பி

கொழும்பு: இலங்கையில் காட்டு யானைகளுக்கும் கிராம மக்களுக்கும் இடையிலான மோதலைச் சமாளிக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டின் அரசாங்கம் உறுதி கூறியுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் 3,500 யானைகள் கொல்லப்பட்டன. அதே சமயத்தில் 1,200 பேர் உயிரிழந்தனர்.

சுற்றுச் சூழல் அமைச்சரான தம்மிக பட்டபெந்தி, வனவிலங்கு சரணாலயங்களுக்கு அருகில் உள்ள கிராமங்களில் யானைகளின் தாக்குதலைக் குறைக்க கூடுதல் மின்வேலிகள் அமைக்கப்படும் என்றும் கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்படுவர் என்றும் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“மனித-யானை மோதலைக் குறைக்க நாங்கள் அதிக பணம் ஒதுக்குகிறோம், மேலும் குறுகிய காலத்திற்குள், நிலைமையைத் தணிக்க முடியும் என்று நம்புகிறோம்” என்று திரு பட்டபெந்தி கூறினார்.

2015 முதல் 2024ஆம் ஆண்டு வரை 1,195 பேர் உயிரிழந்தனர். 3,484 காட்டு யானைகளும் பலியாகியுள்ளன.

ஜனவரி 2025ல், மேலும் மூன்று பேர் மாண்டனர், 43 யானைகள் கொல்லப்பட்டன.

எதிர்க்கட்சி உறுப்பினரான நலின் பண்டாரா, உயிர்பலி அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.

காட்டுவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்படாமல் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

குறிப்புச் சொற்கள்