ஆசியான் கூட்டத்தில் ஒற்றுமைக்குக் குரல்கொடுத்த மார்க்கோஸ்

ஆசியான் கூட்டத்தில் ஒற்றுமைக்குக் குரல்கொடுத்த மார்க்கோஸ்

2 mins read
b4995840-a7a5-41b2-b3e1-90bc50083e8d
பிலிப்பீன்சின் சிபு  48வது ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தின் தொடக்க விழாவில் பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் உரையாற்றுகிறார். - படம்:ராய்ட்டர்ஸ்

சிபு: சவால்மிக்க காலகட்டங்கள் ஆசியானைப் பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக, அந்த அமைப்பு மேலும் அணுக்கமாகச் செயலாற்றும் உறுதியை வலுப்படுத்தியுள்ளன என்று பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் தெரிவித்தார்.

இந்தச் சவால்கள் ஆசியான் மேலும் கூர்ந்து கவனிக்கவும் நோக்கத்துடன் செயல்படவும் உதவும் என்று இவ்வாண்டு ஆசியானின் தலைவராகச் செயலாற்றும் திரு மார்கோஸ், 48வது ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தின் தொடக்க விழாவில் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (மே 8) நடைபெற்ற உச்சநிலைக் கூட்டத்தின் தொடக்கவிழாவில் ஆசியான் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 11 தலைவர்கள் பங்கேற்றனர்.

மலேசியாவுக்குப் பிறகு ஆசியான் தலைமைத்துவத்தைப் பிலிப்பீன்ஸ், இவ்வாண்டு ஜனவரி 1ல் ஏற்று, ‘வருங்காலத்தை ஒன்றாக வழிநடத்துவோம்’ என்ற கருப்பொருளுடன் செயல்படுகிறது.

அமைதி, பாதுகாப்பு ஆகியவற்றுக்கான நங்கூரங்கள், வளப்பத் தடங்கள், மக்களுக்கு ஆற்றலளித்தல் ஆகிய மூன்று தூண்கள் வழி ஆசியானை வழிநடத்துவதாகப் பிலிப்பீன்ஸ் கூறியது.

சவாலான காலகட்டங்களில் ஈடுபாடும் பங்காளித்துவமும் மிக முக்கியம் என்று கூறிய திரு மார்கோஸ், ஆசியானின் பலம் ஒரே மாதிரியாக இருப்பதற்கு மாறாக, அதன் ஒற்றுமையில்தான் அடங்கியுள்ளது என வலியுறுத்தினார்.

“இன்று நாம் நமது பணிகளைத் தொடங்கும் நேரத்தில், விவேகம், வெளிப்படைத்தன்மை, ஒருவருக்கொருவர் நாம் கொண்டுள்ள நிலையான அர்ப்பணிப்பு ஆகியவற்றால் நமது விவாதங்கள் வழிநடத்தப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

மத்திய கிழக்கு மோதல் குறித்துப் பேசிய திரு மார்கோஸ், அங்கு நிலவும் நிலையற்ற சூழல் ஆசிய வட்டாரத்தைப் பாதித்துள்ளதையும் குறிப்பிட்டார்.

மக்களின் வாழ்க்கை முறைகள், வாழ்வாதாரம், மனநலம் ஆகியவற்றை அச்சுறுத்தும் சவால்கள் ஏற்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

“கடந்த சில மாதங்களாக, நமது நாடுகள் ஒவ்வொன்றும் தங்களின் அணுகுமுறைகளை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது.  சிறந்த அணுகுமுறைகளைக் கண்டறிந்து, எதிர்காலத்தை ஒன்றாக எதிர்கொள்வதற்காக நாம் இப்போது ஒன்றுசேர்ந்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்