மணிலா: பிலிப்பீன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர், தமது குடும்பத்துக்கோ நண்பர்களுக்கோ தாம் அதிபர் இல்லை என்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்போவதாகவும் எடுத்துரைத்துள்ளார்.
அதனால் திரு மார்க்கோசின் உடன்பிறவா சகோதரரும் உறவினருமான முன்னாள் நாடாளுமன்ற நாயகரான மார்ட்டின் ரோமுவால்டெஸ்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பில்லியன்கணக்கான பெசோ மதிப்பிலான வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் பல முறைகேடுகள் இடம்பெற்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று திரு மார்க்கோஸ் சென்ற ஆண்டு தெரிவித்தார். இந்த விவகாரத்தில் பல அதிகாரிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் லஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
அதில் ரொமுவால்டெசும் குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. அதனையடுத்து அவர் நாடாளுமன்ற நாயகர் பொறுப்பிலிருந்து விலக நேரிட்டது.
எனினும், இந்த விவகாரத்தில் தவறுகளுக்குப் பொறுப்பேற்கவேண்டியவர்கள் தொடர்பில் கேள்விகள் தொடர்கின்றன. ஏற்கெனவே அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம், பணவீக்கம் ஆகிய பிரச்சினைகளை எதிர்நோக்கிவரும் பிலிப்பீன்ஸ் மக்களிடையே இது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
“எனக்கு இது வேதனை தருகிறது. ஆனால், நாம் சரியானதைச் செய்யவேண்டும்,” என்று 2028ஆம் ஆண்டு அதிபர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதற்கு முன்பு இரண்டாவது கடைசி முறையாக நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது திரு மார்க்கோஸ் கூறினார்.
“நான் எனது குடும்பத்தின் அதிபரல்ல. எனது நண்பர்களுக்கும் அதிபரல்ல. நான் பிலிப்பீன்சின் அதிபர். நான் பிலிப்பீன்ஸ் மக்களுக்குத்தான் சேவையாற்றவேண்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

