ஸ்டாக்ஹோம்: இவ்வாண்டு அமைதிக்கான நோபெல் பரிசு தென்னமெரிக்க நாடான வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்படும் என நார்வேயைச் சேர்ந்த நோபெல் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
இதனை நார்வேயின் ஓஸ்லோ நகரில் நோபெல் பரிசுக் குழுவின் தலைவர் ஜோர்கன் வாட்னே ஃபிரைட்னஸ் அறிவித்தார்.
சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டம், நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாட்டில் ஜனநாயகப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான அச்சமற்ற போராட்டத்துக்காக மச்சாடோவிற்கு இவ்விருது வழங்கப்படுவதாகத் தேர்வுக்குழு தெரிவித்தது.
“சர்வாதிகாரிகள் அதிகாரத்தைக் கைப்பற்றும்போது, அவர்களை எதிர்த்து நிற்கும் துணிவுமிக்க ஜனநாயகப் பாதுகாவலர்களை அங்கீகரிப்பது மிக முக்கியம்,” என்று தேர்வுக்குழு குறிப்பிட்டுள்ளது.
தொழிற்பொறியாளரான 58 வயது மச்சாடோ தலைமறைவாக இருந்து வருகிறார். அதிபர் தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கு வெனிசுவேலா நீதிமன்றங்கள் சென்ற ஆண்டு தடைவிதித்தன. இதனால், கடந்த 2013 முதல் அந்நாட்டின் அதிபராக இருக்கும் நிக்கலஸ் மடுரோவை எதிர்த்து அவரால் களமிறங்க முடியாமல் போயுள்ளது.
அமைதிக்கான நோபெல் பரிசுக்குத் தாம் தகுதியானவர் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் திரும்பத் திரும்பக் கூறிவந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தம், பிணைக்கைதிகள் விடுவிப்பு தொடர்பான முதற்கட்ட அமைதித் திட்டத்தை அக்டோபர் 8ஆம் தேதி அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஆனால், அதற்கு முன்பாகவே நோபெல் தேர்வுக்குழு தனது இறுதி முடிவை எடுத்துவிட்டது.
நோபெல் தேர்வுக்குழு போற்றும் அனைத்துலக ஒழுங்கைத் திரு டிரம்ப் தகர்த்து வருவதால் அவருக்கு அமைதிக்கான நோபெல் பரிசு கிடைக்காது என்று வல்லுநர்களும் கணித்திருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
மொத்தம் 11 மில்லியன் சுவீடிஸ் கிரவுன் (S$1.5 மில்லியன்) மதிப்புடைய அமைதிக்கான நோபெல் பரிசு ஓஸ்லோவில் டிசம்பர் 10ஆம் தேதி நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் வழங்கப்படும்.