தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கட்சித் தேர்தலில் வெற்றி; கனடியப் பிரதமர் ஆகவிருக்கும் மார்க் கார்னி

2 mins read
94e94711-409e-4e87-bf5a-1b0d3ce82745
ஆளுங்கட்சியான ‘லிபரல்’ கட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திரு மார்க் கார்னி. - படம்: ராய்ட்டர்ஸ்

ஒட்டாவா: கனடாவின் ஆளுங்கட்சித் தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) வெளியாகின.

அதில் முன்னாள் மத்திய வங்கி அதிகாரி மார்க் கார்னி வாகை சூடினார்.

இதையடுத்து, தற்போதைய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பிறகு கனடியப் பிரதமராக அவர் பதவி விகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகால நட்பு நாடான அமெரிக்காவுடன் கனடா வர்த்தகப் போரில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்தத் தலைமைத்துவ மாற்றம் இடம்பெறுகிறது.

பிரதமராகப் பதவி ஏற்றதும் திரு கார்னி விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும்.

ஆளுங்கட்சியான ‘லிபரல்’ கட்சித் தேர்தலில் 59 வயது திரு கார்னி 86 விழுக்காடு வாக்குகளைப் பெற்றார்.

தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் நிதி அமைச்சர் கிறிஸ்டியா ஃபிரீலாந்தைத் திரு கார்னி தோற்கடித்தார்.

தேர்தலில் ஏறத்தாழ 152,000 கட்சி உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

“கனடாவின் பொருளியலை யாரோ பலவீனப்படுத்த பார்க்கிறார்கள். அந்த நபர் கனடிய ஊழியர்கள், குடும்பங்கள், வர்த்தகங்களைத் தாக்குகிறார். அவர் நினைத்ததை நடக்க விடக்கூடாது,” என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பைக் குறிப்பிட்டுச் சொன்னார் திரு கார்னி.

“நிலைமை வழக்கத்துக்கு மாறாக இருக்கும். இதற்கு முன் நினைத்துப் பார்க்காதவற்றை மிக விரைவாகச் செய்தாக வேண்டிய நிலை ஏற்படும். இது கனடாவுக்கு மிக முக்கியமான தருணம். ஜனநாயகம், சுதந்திரம், கனடா என்ற நாடு எப்போழுதும் இருக்கும் என்று மெத்தனமாக இருந்துவிடக்கூடாது.

“தற்போது அண்டை நாடு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு பொருளியல் நெருக்கடிநிலை. இதை எதிர்கொண்டு கனடியர்களாகிய நாம், நமது வலிமையையைக் காட்டுவோம்,” என்று கூடியிருந்த கட்சியினரிடம் திரு கார்னி தெரிவித்தார்.

கனடியப் பிரதமராகத் திரு கார்னி பதவி ஏற்கும்போது, அரசியல் பின்னணி இல்லாத முதல் கனடியப் பிரதமராக அவர் திகழ்வார்.

இரண்டு ஜி7 மத்திய வங்கிகளின் ஆளுநராக தாம் இருந்ததாகவும் அதிபர் டிரம்ப்பை எதிர்கொள்ள அந்த அனுபவங்கள் கைகொடுக்கும் என்றும் திரு கார்னி கூறினார்.

குறிப்புச் சொற்கள்