மியன்மார்: 60 நகர்ப்பகுதிகளில் ராணுவச் சட்டம் அமல்

மியன்மார்: 60 நகர்ப்பகுதிகளில் ராணுவச் சட்டம் அமல்

2 mins read
0b307bfc-89e2-422f-8269-06e1ac7432d6
ரக்கைன் மாநிலம் உட்பட 60 நகர்ப்பகுதிகளில் ராணுவக் கட்டுப்பாடு வலுப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. - படம்: ஏஎஃப்பி

நேப்பிடோ: மியன்மாரின் ராணுவ ஆட்சித் தலைவராக இருந்து அதிபராக மாறிய திரு மின் ஆங் ஹிலைங், 60 நகர்ப்பகுதிகளில் ராணுவக் கட்டுப்பாட்டை அமல்படுத்துவதற்கான புதிய அவசரகாலச் சட்டங்களை வெளியிட்டுள்ளார். பொது ஆட்சிக்கு மாறிய பின்னர், இன்னும் மோதல்களில் சிக்கித் தவிக்கும் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

இந்த அவசரகாலச் சட்டங்கள், கச்சின், கயா, கயின், சின், ஷான், ரக்கைன் மாநிலங்கள் மற்றும் சாகைங், மக்வே, மாண்டலே பகுதிகள் முழுவதும் உள்ள 60 நகர்ப்பகுதிகளை உள்ளடக்கியுள்ளன. 2021 ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து, இப்பகுதிகளில் ராணுவம் கட்டுப்பாடுகளையும் ஊரடங்கு உத்தரவுகளையும் விதித்திருந்தது.

அந்த 90 நாள் அவசரகாலத்திற்கான முக்கியக் காரணங்களாக, ‘ஆயுதமேந்திய பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருதல்’ மற்றும் ‘சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுத்தல்’ ஆகியவற்றை அதிகாரபூர்வ அறிவிப்பு குறிப்பிடுகிறது. வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 24) அரசுக்குச் சொந்தமான ஊடகங்கள் வெளியிட்ட அறிவிப்பில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

‘குளோபல் நியூ லைட் ஆஃப் மியன்மார்’ செய்தித்தாளில் வெளியிடப்பட்ட இரண்டாவது அறிவிப்பின்படி, இந்தப் பகுதிகளில் உள்ள அனைத்து நிர்வாக மற்றும் நீதித்துறை அதிகாரங்களும் 90 நாள்களுக்கு மியன்மாரின் புதிய ராணுவத் தளபதி யே வின் ஊவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பரவலாக விமர்சிக்கப்பட்ட தேர்தலில் ராணுவ ஆதரவு பெற்ற கட்சி வென்ற பிறகு, ஏப்ரல் மாத் தொடக்கத்தில் திரு மின் ஆங் ஹிலைங் அதிபரானார். அதன் பின்னர், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் மீதான கட்டுப்பாட்டை வலுப்படுத்த அரசாங்கம் எடுத்த முதல் பெரிய நடவடிக்கையாக அவசரச் சட்டங்கள் அமைந்துள்ளன.

ஆங் சான் சூச்சியை விடுவிக்க கோரிக்கை

ஆசியான் கூட்டமைப்பின் தலைவரான பிலிப்பீன்ஸ், பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சீ உட்பட மியன்மாரின் மற்றக் கைதிகள் சிலரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 24) ஊக்குவித்ததுடன், அண்மைப் பொதுமன்னிப்பு அனைவரையும் உள்ளடக்கிய தேசிய உரையாடலை நோக்கிய நேர்மறையான நடவடிக்கை என்று கூறியது.

“ஆசியானின் ஒருங்கிணைந்த பகுதியாக, மியன்மாரில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு அமைதியான, நீடித்த தீர்வை எட்டுவதற்கு உதவுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்,” என்று 11 உறுப்பினர்களைக் கொண்ட ஆசியான் கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில் பிலிப்பீன்ஸ் ஓர் அறிக்கையில் கூறியது.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் 2021ஆம் ஆண்டு கவிழ்க்கப்பட்டதிலிருந்து திருவாட்டி ஆங் சான் சூச்சி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வாரம் தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் சிஹாசக் புவாங்கெட்கியோ, மியன்மாரின் அதிபர் மின் ஆங் ஹிலைங்கைச் சந்தித்தபோது, ​​திருவாட்டி சூச்சியின் நலன் குறித்து விசாரித்தார்.

தமது அண்மைப் பதவியேற்பு விழாவின்போது, ​​மியன்மாரில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மீண்டும் கொண்டுவருவதற்குத் தாம் முன்னுரிமை அளிப்பதாகவும் ஆசியான் அமைப்புடன் உறவுகளை இயல்பாக்க முயல்வதாகவும் திரு மின் ஆங் ஹ்லைங் கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்