ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக ‘எச்5என்1’ காய்ச்சலால் பல பறவைகள் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக ‘எச்5என்1’ காய்ச்சலால் பல பறவைகள் உயிரிழப்பு

1 mins read
f60593e8-6d2d-4155-a910-c93f4d33d3b2
ஆஸ்திரேலியாவில் எச்5என்1 பறவைக் காய்ச்சலால் கடல் பறவைகள் பாதிப்பு. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: எச்5என்1 வகை பறவைக் காய்ச்சல் மேலும் பரவக்கூடும் என்று ஆஸ்திரேலியா திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) எச்சரிக்கை விடுத்தது.

அடிலெய்ட் நகரின் தெற்குக் கடற்கரைக்கு அருகே தலைமேல் இறகுகளைக் கொண்ட கிரேட்டர் கிரெஸ்டட் டெர்ன் (greater crested tern) எனும் கடல் பறவைகளில் கிட்டத்தட்ட 50, எச்5என்1 காய்ச்சலால் கொல்லப்பட்டுவிட்டன.

எனினும், ஆஸ்திரேலியாவின் பண்ணைகளில் அக்கிருமிப் பரவல் இருப்பதாக ஆதாரம் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் ஆஸ்திரேலியாவில் எச்5என்1 கிருமிப் பரவல் அடையாளம் காணப்பட்ட பிறகு பண்ணை விலங்குகளைப் பாதுகாக்கும் விதத்தில் அந்நாட்டுப் பண்ணைகளில் பெரும்பாலானவை முடக்கநிலையில் இருந்துவருகின்றன.

உயிரிழந்த 49 டெர்ன்கள், நோய்வாய்ப்பட்ட 35 டெர்ன்கள் ஆகியவற்றிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது அவை எச்5என்1 கிருமித்தொற்றுக்கு உள்ளானது உறுதிப்படுத்தப்பட்டதாக ஆஸ்திரேலிய வேளாண் அமைச்சர் ஜூலி கொலின்ஸ் கூறினார். ஹெலிகாப்டர்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட குழுக்கள், அடிலெய்ட்டுக்கு 250 கிலோமீட்டர் அப்பால் உள்ள கேப் ஜாஃபா பகுதியில் இருக்கும் பாறைகளில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 31) அப்பறவைகளைக் கண்டுபிடித்தன.

“கிருமிப் பரவல் அதிகரிப்பதற்கும் வனவிலங்குகளில் கூடுதலானவை அதற்கு உள்ளாவதற்கும் ஆஸ்திரேலியர்கள் தயாராய் இருக்கவேண்டும்,” என்று திருவாட்டி ஜூலி கொலின்ஸ் தலைநகர் கேன்பெராவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்