சோல்: தென்கொரியத் தலைநகர் சோலில் இருக்கும் பெருவிரைவு ரயில் பாதை எண் இரண்டில் செப்டம்பர் 6ஆம் தேதி, பயணி ஒருவர் செய்த செயல் சக பயணிகளை அச்சமடையச் செய்தது.
கூட்ட நெரிசலான பெருவிரைவு ரயிலில் மக்களைத் தள்ளிவிட்டு குதிப்பது போன்ற செயலைச் செய்த பயணியால் சக பயணிகள் அச்சமடைந்து ரயிலுக்குள் அலறி ஓடினர்.
இதனால் அந்த ரயிலில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
கறுப்பு ஆடையும் முகமூடியும் அணிந்த ஆடவர் ஒருவர் ரயிலின் உள்ளே நடக்கும்போது சக பயணிகளை வலுக்கட்டாயமாகத் தள்ளுவதையும் இதனால் பயணிகள் பீதியடைந்து ரயிலுக்குள் அங்கும் இங்கும் ஓடுவதையும் அந்த ரயிலில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் காண முடிந்தது.
இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 21 பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் தடைபட்டதாகவும் அந்த ரயில் கிட்டத்தட்ட 6 நிமிடங்கள் தாமதமாகச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கண்காணிப்பு கேமராவில் பதிவான அடையாளங்களை வைத்து அந்த சந்தேக நபரைக் காவல் துறை அவரின் வீட்டிற்கு அருகே வைத்துக் கைது செய்தது.
வேலைநேரத்தில் இடையூறு செய்தது, வன்முறையில் ஈடுபட்டு மற்றவர்களுக்குக் காயம் ஏற்படுத்தியது ஆகிய இரு குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்குகிறார்.

