பேங்காக் எண்ணெய் ஆலையில் பயங்கர வெடிப்பு

பேங்காக் எண்ணெய் ஆலையில் பயங்கர வெடிப்பு

படம்: ஏஎஃப்பி

26 Nov 2026 - 6:42 pm

2 mins read

பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள எண்ணெய் ஆலை ஒன்றில் வியாழக்கிழமை (நவம்பர் 26) பயங்கர வெடிப்பு ஏற்பட்டது. அதில் எழுவர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் நால்வர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

வெடிப்புச் சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்வுகள் பல கிலோமீட்டர் தொலைவில் இருந்த கட்டங்களிலும் உணரப்பட்டன.

எண்ணெய் ஆலைக்கு மேலே தீப்பிழம்புகளும் கரும்புகையும் எழுந்ததை ஏஎஃப்பி செய்தியாளர்கள் நேரில் கண்டனர்.

பாங்சாக் எண்ணெய் ஆலையில் வெடிப்பு நிகழ்ந்துள்ளதால், அருகிலுள்ள பொதுமக்கள் உடனடியாக அப்பகுதியைவிட்டு வெளியேற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

எண்ணெய் ஆலைக்கு அருகிலுள்ள பள்ளிகளிலிருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும், குடியிருப்பாளர்களும் வெளியேற அறிவுறுத்தப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.

கிழக்கு பேங்காக்கில் உள்ள அப்பெரிய ஆலையை பாங்சாக் கார்ப்பரேஷன் நடத்துகிறது. பிற்பகல் 2.45 மணியளவில் தீப்பிடித்ததை அது உறுதிப்படுத்தியது.

அந்நிறுவனம் உடனடியாகச் செயல்பட்டு உற்பத்திப் பிரிவுகள் அனைத்தையும் மூடியது. பிற்பகல் 3.15 மணியளவில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

விபத்திற்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது. பேங்காக் நகர அதிகாரிகள் கைப்பேசிகளுக்கு அனுப்பிய எச்சரிக்கைச் செய்தியிலும், தீ கட்டுக்குள் இருப்பதை உறுதிப்படுத்தினர்.

மேலும், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு எதிரே உள்ள சாலையைப் பொதுமக்கள் தவிர்க்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

நாளொன்றுக்கு அதிகபட்சமாக 120,000 பீப்பாய்கள் உற்பத்தித் திறன்கொண்ட நவீன ஆலையாக அது திகழ்கிறது.

இந்நிலையில், நிலைமையைத் தாம் கண்காணித்து வருவதாக தாய்லாந்துப் பிரதமர் அனுட்டின் சார்ன்விராகுல் கூறினார்.

நிலைமை கட்டுக்குள் இருப்பதாகத் தெரிவித்த அவர், ஆலையின் முக்கிய உற்பத்திப் பகுதியில் தீ ஏற்படவில்லை என்றும் யார்மீதும் பழிசுமத்துவது இப்போதைக்கு உதவாது என்றும் குறிப்பிட்டார்.

வெடிப்பைத் தொடர்ந்து வானில் கரும்புகை சூழ்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியது. புகை ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்பதால் அப்பகுதி மக்கள் வெளியேறுமாறு எராவன் அவசரகால மருத்துவ நிலையம் எச்சரித்தது.

குறிப்புச் சொற்கள்