பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் சுபாங் ஜெயா அருகில் உள்ள புத்ரா ஹைட்ஸ் பகுதியில், செவ்வாய்க்கிழமை (ஏப்ரல்1) மிக மோசமான தீச்சம்பம் ஏற்பட்டது.
தீச்சம்பவத்தால், 112 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 63 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், 47 வீடுகள் சேதமடைந்துள்ளன என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்களில் அறுவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
புத்ரா ஹைட்ஸ் பகுதியில் உள்ள பெட்ரோனாஸ் எரிவாயு குழாய் இணைப்பில் தீ மூண்டதை சுபாங் ஜெயா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் உறுதிப்படுத்தினார்.
தலைநகர் கோலாலம்பூருக்கு அருகில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
மலேசிய அரசாங்கத்துக்குச் சொந்தமான பெட்ரோனாஸ் பெட்ரோல் நிலையத்தில் எரிவாயுக் குழாய் வெடித்ததில் தீ மூண்டதாக மலேசியத் தீயணைப்புப் படை தெரிவித்தது.
தீ கொழுந்துவிட்டு எரிவதை சுபாங் ஜெயாவிலிருந்தும் சம்பவ இடத்திலிருந்து பல கிலோமீட்டர் தூரத்திலிருந்தும் காண முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
காலை 8.10 மணி அளவில் உதவி கேட்டு அழைப்பு கிடைத்ததாக சுபாங் ஜெயா தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.
“ஜாலான் புத்ரா ஹார்மோனியில் தீ மூண்டது. தீயணைப்புப் பணியில் சுபாங் ஜெயா, ஷா அலாம், பூச்சோங் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்,” என்று செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
தீச்சம்பவத்தைக் காட்டும் படங்களும் காணொளிகளும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
“அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். தீயணைப்புப் படையினரிடமிருந்து கிடைக்கும் கூடுதல் தகவல்கள் மக்களுக்குத் தெரிவிக்கப்படும். தீயணைப்புப் பணியில் ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்படும்,” என்றார் அவர்.
தீச்சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு அருகில் பல குடியிருப்புக் கட்டடங்கள் இருந்ததாகவும் அதிலிருந்து பலர் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பல வீடுகள் தீப்பிடித்துக்கொண்டதை அடுத்து, குடியிருப்பாளர்கள் பலரை மீட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அவர்களில், தீக்காயங்கள், சுவாசப் பிரச்சினைகள் மற்றும் பிற காயங்கள் காரணமாக, 63 பேர் சைபர்ஜெயா, செர்டாங் மற்றும் புத்ராஜெயாவில் உள்ள மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
“மருத்துவ தளமாக அறிவிக்கப்பட்டுள்ள ஸ்ரீ மகா காளியம்மன் கோயிலில் தற்போது மொத்தம் 49 பேர் உள்ளனர். இந்த நோக்கத்திற்காக கோயிலைப் பயன்படுத்த அனுமதித்ததற்காக குழுத் தலைவருக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்,” என்று சிலாங்கூர் துணை காவல்துறை தலைவர் முகமட் ஜைனி அபு ஹாசன் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இதற்கிடையே, ஜாலான் புத்ரா ஹார்மோனி, புத்ரா ஹைட்ஸ், சுபாங் ஜெயா, சிலாங்கூர் ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை எரிவாயு குழாய் தீப்பிடித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவிகளை வழங்குமாறு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் சிலாங்கூர் அரசாங்கத்தையும் சம்பந்தப்பட்ட அமைப்புகளையும் வலியுறுத்தியுள்ளார்.
திடீரென்று காதைப் பிளக்கும் வெடிப்புச் சத்தம் கேட்டதாக சம்பவ இடத்திலிருந்து கிட்டத்தட்ட 200 மீட்டர் தூரத்தில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் தி ஸ்டார் நாளிதழிடம் தெரிவித்தார்.