இத்தாலி: இத்தாலியின் தென்பகுதியில் உள்ளது பெல்காஸ்ட்ரோ எனும் சிறு நகரம்.
கிட்டத்தட்ட 1,300 பேர் இங்கு வசிக்கின்றனர். இந்த நகரின் மேயர் அன்டோனியோ டோர்கியா, ஜனவரி 6ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குடியிருப்பாளர்கள் மருத்துவ உதவி குறிப்பாக அவசர உதவி தேவைப்படும் வகையிலான நோய்த்தொற்றுக்கு ஆளாகக்கூடாது என்பது அவரது அண்மைய ஆணை.
பெல்காஸ்ட்ரோ நகரக் குடியிருப்பாளர்களில் பாதிப் பேர் 65 வயதைக் கடந்தவர்கள். அவர்கள் தீங்கு விளைவிக்கக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் வீட்டிற்குள் நிகழக்கூடிய விபத்துகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் மேயரின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடிக்கடி வெளியே செல்வதையும் பயணம், விளையாட்டு போன்றவற்றையும் தவிர்த்து, பெரும்பாலான நேரம் ஓய்வெடுக்கும்படி அந்த உத்தரவில் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
இது கடுமையான உத்தரவாகத் தோன்றினாலும் உண்மையில் நகரில் போதிய சுகாதாரப் பராமரிப்பு வசதிகள் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாகவே மேயர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
பெல்காஸ்ட்ரோ நகரில் ஒரே ஒரு சுகாதாரப் பராமரிப்பு நிலையம் மட்டுமே உண்டு. அடிக்கடி அது மூடப்பட்டு விடுகிறது.
வாரயிறுதி நாள்கள், பொது விடுமுறை நாள்கள் ஆகியவற்றுடன் அலுவலக நேரத்துக்கு அப்பாலும் மருத்துவர்கள் நோயாளிகளைப் பார்ப்பதில்லை.
தொடர்புடைய செய்திகள்
விபத்து, அவசர மருத்துவ உதவிப் பிரிவுடன் கூடிய ஆக அருகில் உள்ள மருத்துவமனை, 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடன்ஸாரோ நகரில்தான் அமைந்துள்ளது.
தமது உத்தரவு குறித்து உள்ளூர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் டார்கியா, “இது சினமூட்டும் நடவடிக்கையன்று. இந்த உத்தரவு உதவிக்கான அழைப்பு. ஏற்றுக்கொள்ள இயலாச் சூழலை வெளிச்சமிட்டுக் காட்டும் வழி,” என்று கூறினார்.
வட்டார மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்துக்குத் தீர்வுகாணத் தூண்டுவது இதன் நோக்கம் என்றார் அவர். பொதுச் சுகாதார நிலையம் வழக்கமாகச் செயல்படும் வரை இது நடப்பிலிருக்கும் என்றும் அவர் கூறினார்.