நியூசிலாந்தில் நீரின் சுத்தத்தை நிரூபிக்க நீந்திய மேயர்

நியூசிலாந்தில் நீரின் சுத்தத்தை நிரூபிக்க நீந்திய மேயர்

1 mins read
8731c22f-2229-4c98-8776-cf0a45b1d693
வெல்லிங்டனின் தென்கடற்கரைப் பகுதி. - படம்: ஏஎஃப்பி

வெல்லிங்டன்: நியூசிலாந்துத் தலைநகர் வெல்லிங்டனின் மேயர், கழிவால் கடல்நீர் மாசடையவில்லை என்பதை நிரூபிக்க புதன்கிழமை (பிப்ரவரி 25) பிற்பகல் நீந்திக் காட்டியிருக்கிறார்.

உள்ளூர்க் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை ஒன்று செயலிழந்ததால் அங்கிருந்து சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படாத கழிவு, பெருங்கடலுக்குள் கசிந்தது. அதனால் கடற்கரைப் பகுதிகளில் வசிப்போரின் வீட்டுச் சுவர்களை மனிதக் கழிவுகள் பாதித்தன.

மொவா பாய்ன்ட் சுத்தகிரிப்பு ஆலை பிப்ரவரி மாதம் நான்காம் தேதி கோளாறு காரணமாகச் செயலிழந்துபோனது. அதனால் மில்லியன்கணக்கான லிட்டர் அளவில் சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படாத கழிவு, வெல்லிங்டனின் எழில் கொஞ்சும் தென்கடற்கரைப் பகுதிகளில் கசிந்தது.

மேயர் ஆண்ட்ரூ லிட்டல் கடல்நீருக்குள், முகம் முதலில் நுழையும் வகையில் முக்குளித்து நீந்தினார். கடல்நீர் இப்போது பாதுகாப்பாகத்தான் உள்ளது என்ற நம்பிக்கையை ஆத்திரமடைந்த குடியிருப்பாளர்களிடையே மீண்டும் வளர்க்க அவர் அவ்வாறு செய்தார்.

“நான் தெளிவாகச் சொல்கிறேன். அபாயம் இன்னமும் உள்ளது. ஆனால் அது மிகவும் குறைவு என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இனி மக்கள்தான் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று முடிவெடுக்கவேண்டும்,” என்று திரு லிட்டல் கூறினார்.

நீந்தவோ மீன் பிடிக்கவோ வேண்டாம் என்று வெல்லிங்டன் நகர மன்றம் முன்னதாக மக்களைக் கேட்டுக்கொண்டது. சென்ற வாரம் அந்நகரை வெள்ளம் தாக்கியதால் நிலைமை மோசமடைந்தது. அதனால், கழிவு வீடுகள் மீதும் தெறித்தது.

குறிப்புச் சொற்கள்