தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எம்பாக்ஸ் தொற்றுக்காக முடக்கநிலை அறிவிக்கப்படாது: மலேசிய சுகாதார அமைச்சர்

1 mins read
e91e7bc9-29dd-45e8-bbac-d1fcfd409337
கொவிட்-19 பரவலின்போது அறிவிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகள் போன்றவை பிறப்பிக்கப்படாது என்று மலேசியச் சுகாதார அமைச்சர் டாக்டர் ஸுல்கிஃப்லி அகமது தெரிவித்துள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்

சுங்கை பூலோ: கொவிட்-19 தொற்று பரவியபோது அறிவித்ததுபோல, எம்பாக்ஸ் (குரங்கம்மை) தொற்றுக்காக நாடு முழுமைக்குமான முடக்கநிலையை அறிவிக்கத் திட்டமில்லை என்று மலேசியச் சுகாதார அமைச்சர் டாக்டர் ஸுல்கிஃப்லி அகமது தெரிவித்துள்ளார்.

எம்பாக்ஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்து வருவதாகக் கூறிய அவர், கொவிட்-19 பரவலின்போது அறிவிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகள் போன்றவை பிறப்பிக்கப்படாது என்றும் சொன்னார்.

மலேசியாவிற்கு வரும் அனைத்துலகப் பயணிகளை உடல்நலப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் நிலம், கடல், வானம் என மூவகை நுழைவுவழிகளிலும் அது செயல்படுத்தப்படுவதாகவும் டாக்டர் ஸுல்கிஃப்லி குறிப்பிட்டார்.

“இதுவரை ஆறு மில்லியனுக்கும் மேற்பட்ட அனைத்துலகப் பயணிகள் உடல்நலப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 52 பேருக்கு எம்பாக்ஸ் தொற்று இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது. ஆயினும், அவர்களை எம்பாக்ஸ் தொற்றவில்லை என மருத்துவப் பரிசோதனை முடிவுகள் காட்டின,” என்று அவர் தெரிவித்தார்.

அவ்வகையில், இவ்வாண்டு மலேசியாவில் இதுவரை எவரையும் எம்பாக்ஸ் தொற்றியதாகப் பதிவாகவில்லை என்றும் அவர் சொன்னார்.

ஆனாலும், சில அண்டை நாடுகளில் எம்பாக்ஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பதற்றமின்றியும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று டாக்டர் ஸுல்கிஃப்லி வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்